×

வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய அதிமுக மாவட்டங்கள் திடீரென 6ஆக பிரிப்பு: இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் செயல்பட்டு வரும் வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மாவட்டங்கள் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, 3 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற 3 மாவட்டங்களுக்கு ஏற்கனவே இருந்த மாவட்ட செயலாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும், கட்சி பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள் கீழ்க்கண்டவாறு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பின்வரும் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும். அந்த மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

அதன்படி,
1) வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் - டி.ஜெயக்குமார் மாவட்ட செயலாளர் (அமைச்சர், அதிமுக அமைப்பு செயலாளர்). இந்த மாவட்டத்தில் ராயபுரம், திரு.வி.க.நகர் (தனி) தொகுதிகள் இடம்பெறும்.
2) வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் - நா.பாலகங்கா (இவர் இதுவரை வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தார்). இந்த மாவட்டத்தில் எழும்பூர் (தனி), துறைமுகம் தொகுதிகள் இடம்பெறும்.
3) தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் - ஆதிராஜாராம் (அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் வாரிய தலைவர்). இந்த மாவட்டத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு தொகுதிகள் இடம்பெறும்.
4) தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் - தி.நகர் சத்தியா எம்எல்ஏ. (இவர் இதுவரை தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தார்). இந்த மாவட்டத்தில் தி.நகர், அண்ணாநகர் தொகுதிகள் இடம்பெறும்.
5) தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் - எம்.கே.அசோக் (வேளச்சேரி தொகுதி, முன்னாள் எம்எல்ஏ). இந்த மாவட்டத்தில் மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதிகள் இடம்பெறும்.
6) தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் - விருகை வி.என்.ரவி எம்எல்ஏ. (இவர் இதுவரை தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தார்). இந்த மாவட்டத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை தொகுதிகள் இடம்பெறும்.
அதிமுக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், அதிமுக தொண்டர்களும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். அதிமுக மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,North Chennai South ,South Chennai North and South ,announcement ,OPS , AIADMK divides North Chennai South, South Chennai North and South into 6: EPS, OPS announcement
× RELATED பாஜகவிடம் அதிமுகவை பகிரங்கமாக அடகு வைத்துவிட்டதாக கோபண்ணா விமர்சனம்