×

இன்று சர்வதேச பக்கவாத தினம் உங்களுக்கு 50 வயசு ஆயிருச்சா... உஷார்!

நெல்லை: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 29ம் தேதி சர்வதேச பக்கவாத தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பக்கவாதத்தை தடுப்பது, சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம். உலகம் முழுவதும் இறப்புக்கும், ஊனத்திற்கும் முக்கிய காரணமாக உள்ள பக்கவாதம் உலகளவிலான முக்கிய சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. பக்கவாதத்தால் உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி பேரும், இந்தியாவில் 15 லட்சம் பேரும் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். 50 வயதைக் கடந்தவர்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மூளையின் ஒரு பகுதிக்கு செல்கிற ரத்த ஓட்டம் தடைபடும் போது உயிர்க்காற்றும், சத்துக்களும் கிடைக்காமல் அப்பகுதி செயலற்றுப் போவதால், உடலின் எதிர்பாகத்தில் உள்ள உறுப்புகள் செயலற்றுப் போவதை பக்கவாதம் என்று சொல்கிறோம். மனித மூளையை வலது, இடது என இரண்டு பிரிவுகளாக பிரிக்கின்றனர். இதில் இடது பக்கம் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ரத்த அடைப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுகிறபோது, அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் உடலின் வலது பக்க உறுப்புகளான கை, கால், முகம் போன்றவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். இதேபோல் வலது பக்க மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ரத்த அடைப்பு அல்லது ரத்த கசிவு பிரச்னைகள் ஏற்பட்டால், உடலின் இடது பக்க உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி, இதய நோய், குடும்ப வரலாறு, குடி மற்றும் புகைப்பழக்கம், சத்தற்ற உணவு, உப்பு, எண்ணெய் உணவுகளை அதிகமாக பயன்படுத்துதல், உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை பக்கவாதத்தை ஏற்படுத்துகிற ஆபத்துக் காரணிகளாக உள்ளது. உணவில் குறைவான அளவில் கொழுப்பு மற்றும் உப்பினை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துடைய முழு தானியம், பழம், காய்கறி போன்றவற்றை உண்ண வேண்டும். புகையிலை மற்றும் அதிக குடிப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உடல் எடையைப் பேணுவதற்கு தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

யோகா, தியானம் மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம். உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும். சரியான நேரத்தில், முறையாக உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிலர் முற்றிலும் குணம் அடையலாம். ஆனால் சிலர் குணம் அடைவதில்லை. எனவே, இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உடனடியாக மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறுவது நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவியாக இருக்கும்.


Tags : International Stroke Day ,Usher , Today is International Stroke Day and you are 50 years old ... Usher!
× RELATED இந்தியா முழுவதும் மக்களாட்சி...