×

தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு: கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது: மருத்துவமனையில் நுழைந்து அமலாக்கத் துறை அதிரடி

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில், விசாரணை வளையத்தில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன் ஜாமீன் மனுவை  கேரள உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அமலாக்கத் துறை அதிரடியாக  கைது செய்தது. கேரளாவில் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகம் மூலமாக பல கோடி மதிப்புள்ள  தங்கத்தை கடத்திய சொப்னா கும்பல் கைது  செய்யப்பட்டுள்ளது. இந்த சொப்னாவுடன் கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி   சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததால், விசாரணை வளைத்தில் அவரும் சிக்கினார். சுங்க இலாகா, அமலாக்கத் துறை தொடர்ந்த  வழக்குகளில்  முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு  மீதான விசாரணை ேநற்று காலை நீதிபதி அசோக் மேனன் முன்னிலையில் நடந்தது.  விசாரணையை தொடர்ந்து சிவசங்கரின்  முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார். இந்த உத்தரவு வெளியான ஒரு சில நிமிடத்தில்  அமலாக்கத் துறை அதிகாரிகள்,  சிவசங்கர் சிகிச்சை பெற்று வந்த  திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு விரைந்து  சென்றனர். சிவசங்கரின் உடல்நிலை குறித்து  அதிகாரிகள் விசாரித்தபோது, சிவசங்கர் நல்ல  உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து, அதிகாரிகள் அவரை அதிரடியாக  கைது செய்து காரில் கொச்சிக்கு அழைத்து சென்றனர்.  விசாரணைக்குப் பிறகு, அவரது கைது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

 சிவசங்கரிடம் நடத்தப்படும்  விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. கேரள சட்டசபைக்கு  இன்னும் 6 மாதங்களில்  தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் சிவசங்கரை அமலாக்கத்துறை அழைத்து  சென்றுள்ளது ஆளும் இடதுசாரி அரசுக்கு  கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

யார் அந்த தாவூத் அல் அரபி?
ஒருமுறை அதிகபட்சமாக 10 கிலோவுக்கு மேல் தங்கத்தை கடத்த வேண்டாம் என்று சொப்னா, ரமீஸிடம் கூறி உள்ளார். ஆனால் அதற்கு மேலான  எடையில் தங்கத்தை கடத்தி வந்து உள்ளனர். இவ்வாறு கூடுதல் எடையில் தங்கம் கடத்தியபோதுதான் 2 முறை துபாய் சுங்க இலாகா அதை தடுத்து  நிறுத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இது நடந்துள்ளது. சந்தேகம் அடைந்த துபாய் சுங்க இலாகா, திருவனந்தபுரத்தில் உள்ள  அமீரக தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து சிலமாத இடைவெளிக்கு பிறகு, தங்கம் கடத்தும் பொறுப்பை தாவூத் அல் அரபி  ஏற்றுக்கொண்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

ஆனால் தாவூத் அல் அரபி யாரென இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
கடைசியாக தங்கம் சிக்கிய போது ஒரு மலையாளி அதை சரியாக கவனித்து கொள்வார் என தன்னிடம் தூதரக அட்டாஷே பொறுப்பில் உள்ள  அதிகாரி கூறியதாக சொப்னா விசாரணையில் தெரிவித்திருந்தார். எனவே அந்த மலையாளிதான் தாவூத் அல் அரபியாக இருக்கலாம் என்று  சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரபின்ஸ் ஹமீதை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு  நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் முக்கிய பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக வலியுறுத்தல்
ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டதால், முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ்  பா.ஜ உட்பட  எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறுகையில்,  ‘‘சிவசங்கர் கைது  செய்யப்பட்டுள்ளார் என்றால் முதல்வர் பினராய் விஜயன் ைகது செய்யப்பட்டதற்கு சமமாகும். எனவே, இனியும் அவர் முதல்வர் பதவியில் இருந்து  அவமானப்பட வேண்டாம். உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்,’’ என்றார்.

7 பேர் மீது காபிபோசா
இதற்கிடையே தங்கம் கடத்தலில் தொடர்புடைய சரித்குமார், ரமீஸ், ரபின்ஸ் ‌ஹமீது உள்பட 7 பேருக்கு எதிராக காபிபோசா சட்டத்தின்கீழ்  வழக்குப்பதிவு செய்ய சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. ஏற்கனேவே சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் மீது காபிபோசா வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.



Tags : Sivasankar ,Kerala IAS , Kerala IAS officer Sivasankar arrested in gold smuggling case
× RELATED திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ் இயக்கம்