விளங்க முடியா கவிதை நான்... உற்சாகத்தில் ரஷித் கான்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 88 ரன் வித்தியாசத்தில்  அபாரமாக வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. துபாயில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி  அணி முதலில் பந்துவீச... ஐதராபாத் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது. ‘பர்த்டே பாய்’ வார்னர் 66 ரன், சாஹா 87 ரன்,  மணிஷ் பாண்டே 44* ரன் விளாசி, கேப்பிடல்சுக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினர். அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவரிலேயே  அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 131 ரன்னுக்கு சுருண்டது. ரகானே 26, ஹெட்மயர் 16, பன்ட் 36, தேஷ்பாண்டே 20* ரன் எடுக்க, மற்ற வீரர்கள்  அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

ஐதராபாத் பந்துவீச்சில் ரஷித் கான் 4 ஓவரில் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சந்தீப், நடராஜன் தலா 2, நதீம்,  ஹோல்டர், ஷங்கர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதிரடியாக 87 ரன் விளாசிய சாஹா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் ரஷித்  கானின் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது என்றால் மிகையல்ல. அவரது பந்துவீச்சு விவரம் ஒரு கணினிமொழிக்  கவிதை போல இருப்பதாக சன்ரைசர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

போட்டி முடிந்ததும் பேட்டியளித்த ரஷித் கான் கூறுகையில், ‘எனது தனிப்பட்ட சாதனையை விடவும் வெற்றியை வசப்படுத்துவதே முக்கியமானது.

ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. விக்கெட் வீழ்த்துகிறோமோ இல்லையோ... அதிக ரன் விட்டுக்கொடுக்காமல் துல்லியமாகப் பந்துவீசுவதில்  மட்டுமே கவனம் செலுத்தினேன். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சரியான அளவில் பந்துவீசினேன். பேட்ஸ்மேனின் பலம், பலவீனத்துக்கு  ஏற்ப பந்துவீசுவது அவசியம். அதை கருத்தில் கொண்டு செயல்பட்டேன்’ என்றார்.

Related Stories:

>