×

இந்தி அல்லது ஆங்கிலத்தில் கேட்டு தமிழில் எழுதிய கோரிக்கை மனுவை திருப்பி அனுப்பிய மத்திய அமைச்சகம்

பண்ருட்டி: கடலூர் செம்மங்குப்பத்தில் சைமா சாயப்பட்டறை தொழில்திட்டத்திற்கு சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சி எடுத்து செல்வதை தடை செய்ய கோரி பண்ருட்டி தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பினார். மனு தமிழில் இருந்ததால் அம்மனுவை மேற்கண்ட மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சக அதிகாரிகள் புகார் செய்த சிவக்கொழுந்துவிற்கு கடந்த 16ம் தேதியிட்டு இந்தி அல்லது ஆங்கிலத்தில் மனுவை எழுதி அனுப்புமாறு கூறி திருப்பி அனுப்பினர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இத்துறை, மொழி பாகுபாடு காரணம் காட்டி, அதுவும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மொழிகளில் தமிழ் இருக்கும்போது மனுவை திருப்பி அனுப்பியுள்ளது. இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து கூறுகையில், தமிழில் எழுதிய மனுவுக்கு பாகுபாடு காட்டி திருப்பி அனுப்பப்படுவது தமிழகத்தையும், தமிழ் மொழியையும் அவமதித்து கோரிக்கைகளை நீர்த்துபோக செய்யும் சதிதிட்டம். எனவே இதற்கு காரணமான துறை அதிகாரிகள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags : Union Ministry , The Union Ministry returned the request in Hindi or English and written in Tamil
× RELATED இந்தி அல்லது ஆங்கிலத்தில் கேட்டு...