×

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; பீகாரின் ‘ஜெனரல் டயர்’ எஸ்பி லிப்பி சிங்: தலைவர்களுடன் சேர்ந்து மூத்த ஐபிஎஸ் ரூபாவும் கண்டனம்

பாட்னா: பீகாரில் துர்கா சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், அம்மாவட்ட எஸ்பியை பீகாரின் ‘ஜெனரல் டயர்’ என்று விமர்சித்து வருகின்றனர். இந்த கண்டனங்களுடன் கர்நாடக மூத்த ஐபிஎஸ் ரூபாவும் கருத்து தெரிவித்துள்ளார். பீகாரில் நேற்று முன்தினம் இரவு முங்கரில் உள்ள தீண்டயல் சவுக் அருகே துர்கா சிலை ஊர்வலத்தின்போது காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் எஸ்பி லிப்பி சிங்கை ஜெனரல் டயருடன் (ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி) ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி, லோக் ஜனசக்தி தலைவர் சிராக், ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். போலீசார் தரப்பில், சமூக விரோத கும்பல் கல் வீச்சு நடத்தியதால், அதனை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் பல போலீசார் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால்,  துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் இறந்ததை போலீசார் மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து முங்கர் போலீஸ் எஸ்பி லிப்பி சிங் கூறுகையில், ‘துர்கா சிலை ஊர்வலத்தில் சிலர் ஆயுதங்கள், வெடிமருந்துகளை கொண்டு வந்தனர். போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வாலிபர் இறந்தது குறித்து விசாரிக்கப்படுகிறது. அவர் போலீஸ் தோட்டாவால் காயமடையவில்லை’ என்றார். இதற்கிடையே, முங்கரில் ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கிசூடு வீடியோவைப் பகிர்ந்த கர்நாடக மாநில உள்துறை  செயலாளர் டி.ரூபா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‘சிஆர்பிசி சட்டத்தின்படி போலீசார் குறைந்தபட்ச சக்தியைப்  பயன்படுத்தி கட்டுக்கடங்காத கூட்டங்களை கலைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், சட்ட விதிகளின்படி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பாக எச்சரிக்கை விடுக்க வேண்டும். பின்னர்  கண்ணீர்ப்புகை வாயுவை பிரயோகப்படுத்த வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது முங்கரில்  பின்பற்றப்படவில்லை’ என்று கருத்து தெரிவித்து, சக இளம் ஐபிஎஸ் அதிகாரியான லிப்பி சிங்குக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரூபா ஆலோசனை வழங்கியுள்ளார்.

Tags : shooting ,Bihar ,General Tire ,SP Lippi Singh ,leaders ,Senior ,IPS , One killed in shooting; Bihar 'General Tire' SP Lippi Singh: Senior IPS rupee condemned along with leaders
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு