×

ஊரடங்கு தளர்வு எதிரொலி; ஏலகிரி மலைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்: இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி

ஜோலார்பேட்டை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா இடங்களுக்கு பயணிகள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பல கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஒரு சில சுற்றுலா இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு விடுமுறை நாட்களில் இரு சக்கர வாகனங்களிலும், கார் மூலமாகவும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து இயற்கை அழகை ரசித்துவிட்டு செல்கின்றனர். இதனால் ஏலகிரி மலை காவல் நிலைய போலீசார் பொன்னேரி மலையடிவாரத்தில் வாகன சோதனை சாவடி அமைத்து இ-பாஸ் உள்ளவர்கள் மட்டுமே மலைக்கு செல்ல அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு படையெடுத்தனர். அப்போது இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகளை மட்டும் போலீசார் அனுமதித்தனர். மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஏலகிரி மலையில் உள்ள சுற்றுலா இடங்களை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Yelagiri Hills , Echo of curfew relaxation; Tourists invading Yelagiri Hills: Only e-pass holders allowed
× RELATED கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்