அமைச்சர் தொகுதியிலேயே கதர் கிராம தொழில் மையத்துக்கு பூட்டு

காரைக்குடி: காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள கதர்கிராம தொழில்கள் மையம் பூட்டப்பட்டதால் சுற்றுவட்டார கிராம மக்கள் வேலைவாய்ப்பின்றி வீட்டில் முடங்கி போய் உள்ளனர். காரைக்குடி அருகே கண்டனூரில் தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியம் சார்பில் கதர் கிராம தொழில்கள் மையம் உள்ளது. 26 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தொழில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்கான இம் மையம் உருவாக்கப்பட்டது. இதில் 3 ஏக்கரில் கதர் மற்றும் காதி சம்பந்தப்பட்ட தொழில்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு சொந்தமான இந்த தொழில் கூடத்தை மத்திய அரசின் கதர் வாரியத்துக்கு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது.

இதில் தச்சு தொழில், சோப்பு அலகு, நூற்பு நிலையம், காலணி அலகு, நவீன தறி அலகு, கை முறை காகித அலகு, ஸ்டீல் யூனிட் உள்பட பல்வேறு சிறு தொழில்கூடங்கள் செயல்பட்டு வந்தன. கண்டனூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் இக்கூடங்களில் பணியாற்றி வந்தனர். மத்திய அரசின் கதர் வாரிய நிறுவனம் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் சொந்த கட்டிடம் கட்டி அங்கு சென்று விட்டனர். அதில் இருந்து இயங்கி வந்த அனைத்து தொழில்கூடங்களும் பூட்டப்பட்டு பயனற்று முடங்கி போய் உள்ளது. தொழில்கூடங்கள் நிறைந்து இருந்த பகுதி தற்போது எந்தவித செயல்பாடும் இல்லாமல் கட்டிடங்கள் அனைத்தும் பழுதடைந்து வருகிறது. தவிர இதில் பணியாற்றிய குடும்ப பெண்கள் தற்போது வேலையிழந்து அன்றாட செலவுகளுக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், பல்வேறு கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்த இந்த தொழில்கூடம் தற்போது பயனற்று மூடிகிடக்கிறது. இதனால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய அமைச்சர் இத் தொகுதியை சார்ந்தவராக இருந்தும் கண்டு கொள்ளாத நிலையே உள்ளது. சுற்றுப்புற மக்களின் நலன்கருதி மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.   

Related Stories:

>