×

தசரா திருவிழா நிறைவு: தாமிரபரணி ஆற்றில் முளைப்பாரி கரைப்பு

நெல்லை: பாளையில் உள்ள அம்மன் கோயில்களில் தசரா திருவிழா நிறைவு  பெற்றதை தொடர்ந்து வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் முளைப்பாரி கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. குலசை கோயிலுக்கு மாலை அணிந்த பக்தர்களும், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து அணி அணியாக வந்தனர். மைசூருக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா சிறப்பு பெற்றதாகும். இக்கோயிலில் தசரா திருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நேற்று நிறைவு பெற்றது. முன்னதாக அதிகாலையில் மகிஷா சூரம்சஹாரம் நடந்தது.

இதேபோல் பாளையில் உள்ள 12 அம்மன் கோயில்களிலும் தசராவை முன்னிட்டு 9 நாட்கள் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடந்தது. பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் கடந்த 16ம் தேதி அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து 12 அம்மன் கோயில்களிலும் தசரா துவங்கியது. 10வது நாளான நேற்று முன்தினம் இரவு அனைத்து அம்மன் சப்பரங்களின் ஊர்வலம் நடந்தது. இதைத் தொடர்ந்து பாளை காவல் கட்டுப்பாட்டு அறை எருமைகடா மைதானத்தில் மகிஷாசூரசம்ஹாரம் நடந்தது. இந்தாண்டு கொரோனா பரவல் தடை காரணமாக குலசேகரன்பட்டினம் மற்றும் பாளையில் தசரா பண்டிகை கொண்டாட அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இதனால் பக்தர்கள் தாங்கள் வளர்த்திருந்த முளைப்பாரியை கரைப்பதற்காக நேற்று நெல்லை தாமிரபரணி நதிக்கரைக்கு அதிகளவில் வந்தனர். மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மேளதாளம் முழங்க தாமிரபரணிக்கு அணி அணியாக வந்தனர். அவர்கள், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோயில், குறுக்குத்துறை, சிந்துபூந்துறை உள்ளிட்ட இடங்களில் முளைப்பாரிக்கு தீபமேற்றி வழிபட்டு ஆற்றில் கரைத்தனர். இந்தாண்டு குலசேகரன்பட்டினம் கடற்கரைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் தாமிரபரணி ஆற்றில் முளைப்பாரியை கரைக்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Dasara Festival ,Tamiraparani River , Tasara Festival
× RELATED தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க சுவர் கட்டும் பணி நிறைவு