×

வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு வாங்கும் அவலம்: வேளாண் அலுவலகங்களில் விதைகள் தட்டுப்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் அலுவலகங்களில் விதைகள் தட்டுப்பாடு இருப்பதால், வெளிமார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்றவிதைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் விவசாயிகள் நிறைந்த விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 75 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருக்கின்றனர். விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 7,22,203 ஹெக்டரில் 3,37,305 ஹெக்டர் (45%) விவசாயம் நடக்கிறது. கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடிசெய்தாலும் நெற்பயிர் இம்மாவட்டத்தின் பிரதான சாகுபடியாக விளங்குகிறது. சொர்ணவாரி, சம்பா மற்றும் நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் நெற்பயிர்சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் மொத்த பயிர் சாகுபடி பரப்பில் 40 சதவீத நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

நெல்லுக்கு அடுத்தபடியாக பயறுவகை இம்மாவட்டத்தில் முக்கிய உணவுதானிய பயிராக விளங்குகிறது. அதில் உளுந்து 80 சதவீதம், அதற்கு அடுத்தபடியாக மணிலா, காராமணி, மக்காச்சோளம் போன்ற பயிறுவகை சாகுபடி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், உணவு தானிய உற்பத்தியில் மாநிலத்தில் முக்கிய பங்கினை இவ்விறு மாவட்டங்களும் பிடிக்கிறது. பயிர் உற்பத்தியில் உற்பத்தி திறனில் மாநில அளவில் 850 கிலோ சராசரி மகசூல் பெற்று முதலிடத்தில் உள்ளது. இப்படி பயிர்சாகுபடிகளில், முன்னிலை வகிக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், இடு பொருட்கள் வேளாண் அலுவலகங்களில் கிடைப்பதில் பெரும் சிரமம் இருந்து வருகின்றன.

மூன்று போகம் நெல்சாகுபடி நடைபெறும் நேரத்தில் விவசாயிகள் பயிரிடும் வெள்ளைப்பொன்னி, 51 போன்ற ரக விதைகள் கிடைப்பதில்லை. வட்டார வேளாண் அலுவலகங்களில் சென்று கேட்டால், அவர்கள் ஏதோ ஒரு விதையை கொடுத்து இது தான் இருப்பதாக கூறுகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில், இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை தெரிவித்தும் விதைகள் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. விதைப்பண்ணை உரிமையாளர்களுடன் சிண்டிகேட் வைத்து, வேளாண் அலுவலகங்களுக்கு செல்லும் விவசாயிகளை திருப்பி அனுப்புகின்றனர். தனியார் விதைப்பண்ணைகளில், வாங்கினாலும் 30 சதவீதம் தரமற்றவைகளாக இருப்பதால் போதிய மகசூல் கிடைக்காமல் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். உரம் விலை உயர்வு, வறட்சி போன்ற இன்னல்களுக்கிடையே விதை தட்டுப்பாடு இருப்பதால், பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Tags : offices , Seed shortage
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுநர்...