×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் சொட்டு நீர் பாசனத்திற்கு அனுமதி

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் சொட்டு நீர் பாசனத்திற்கு லஞ்சம் கொடுத்தால் மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், தரமற்ற பொருட்களை வழங்குவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி, வருங்கால தலைமுறைக்கு வளமான நீர்வளத்தை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மேலும், அபரிமிதமாக நீரை பயன்படுத்துவதைவிட அளவாக பயன்படுத்தும் போதுதான் நிறைவான மகசூல் பெற முடிகிறது என்பது அறிவியல் பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நீர்மேலாண்மை முறையில் விவசாயத்தை காப்பாற்றும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக சொட்டுநீர் பாசன நடைமுறை கடந்த 2007-2008ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏழை விவசாயிகள் குறைந்த நீரை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொண்டனர்.

சொட்டுநீர் கட்டைமைப்பை ஏற்படுத்துவதற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு ஹெக்டர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்து அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆரம்ப காலத்தில் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்ற சொட்டு நீர் பாசன திட்டம், கால போக்கில் விவசாயிகளிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணம் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொகை லஞ்சமாக வழங்கினால், மட்டும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்குகின்றனர். லஞ்சம் தரவில்லை என்றால் விண்ணப்பங்களை கிடப்பில் போட்டு விடுகின்றனர். அதோடு, சொட்டு நீர் பாசனத்திற்கான உபகரணங்கள் தரமற்ற வழங்கப்படுவதாகவும், நிலங்களில் பொருத்திய ஓரிரு மாதங்களிலேேய பழுதடைந்து விடுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சொட்டு நீர் பாசன திட்டத்தில் நூறு சதவீதம் மானியம் என கூறுகின்றனர். ஆனால், கூடுதலாக ₹20 ஆயிரம் வரை கேட்கின்றனர். இது எதற்கு என தெரியவில்லை. விவசாயிகளிடமிருந்து கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டால், இது எப்படி நூறு சதவீதம் மானியம் ஆகும். ஒரு ஏக்கரில் அதிகளவில் மரங்கள் வளர்த்தால், குறிப்பிட்ட மரங்களுக்கு மட்டும் மானியம் வழங்க முடியும். மீதமுள்ள மரங்களுக்கு சொட்டு நீர் பாசன கருவிகள் வழங்கப்படவில்லை. அரைகுறை மானியமும் முறையாக வந்து சேருவதில்லை. விவசாயிகளுக்கு அளிக்கப்படும் திட்டங்கள் குறித்த தகவல்களை, தமிழக அரசு முறையாக தெரிவிப்பது இல்லை. மத்திய அரசின் மானியத்தையும் முறையாக வழங்குவதில்லை. முறைகேடு இன்றி, மானியத்தை குறித்த காலத்திற்குள் வழங்கினால் விவசாயம் செழிக்கும்.

கொரோனா ஊரடங்கின்போது, பலரும் விவசாய தொழிலுக்கு திரும்பி உள்ளனர். ஆனால், அவர்கள் மானியம் குறித்து வேளாண் அலுவலகங்களுக்கு சென்றால், அதிகாரிகள் சரியாக பதிலளிக்காமல் திருப்பி அனுப்பி விடுகின்றனர். ஒரு சில அதிகாரிகள், விவசாயி எனக்கூறி போலியாக சேர்த்து மானியம் பெற்றதாக கணக்கு காட்டி பணத்தை சுருட்டி விடுகின்றனர். கிசான் திட்டத்தில் போலியாக ஆயிரக்கணக்கான நபர்களை இணைத்து கோடிக்கணக்கில் பணத்தை முறைகேடு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வங்கி கணக்கில் பண பரிவர்த்தனை என்பதால் முறைகேடு செய்யப்பட்ட பணத்தில் 80 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற திட்டங்களில் நடந்த முறைகேடுகள் மீது விசாரணை நடத்தி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags : Ranipettai ,Vellore ,Tirupati ,Thiruvannamalai ,districts , drip irrigation
× RELATED சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு...