×

வங்கிகள் இணைப்பால் மேலும் சுமை: நகை கடன் சேவை கட்டணத்திற்கும் வட்டி, ஜிஎஸ்டி வசூல்

நாகர்கோவில்: வங்கிகள் இணைப்பு காரணமாக நகை கடனுக்கு பல மடங்கு சேவை கட்டணம், அதற்கு ஜிஎஸ்டி, இவற்றுக்கு வட்டி வசூல் என்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. குமரி, நெல்லை மாவட்டங்களில் விவசாயிகள் நலன் கருதி அவசர அவசிய தேவைகளுக்கு தேசிய வங்கியான சின்டிகேட் வங்கி பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக மக்களின் பண தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. மிக முக்கியமாக நகை கடன் வசதி அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் எளிதாக கிடைக்க வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் விவசாயிகளான வாடிக்கையாளர்கள், பொருளாதார வசதியில்லாதவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள், சிறு குறு தொழில் புரிவோர், வியாபாரிகள், மீனவர்கள் என்று பல்வேறு வகையில் உள்ள தொழிலாளர்கள் தங்களின் அவசர தேவைகளான மருத்துவம், பிள்ளைகளின் கல்வி போன்ற பல்வேறு தேவைகளுக்கு தங்கள் வசம் உள்ள தங்க நகைகள் மீது கடன்பெறும் வசதிக்கு சின்டிக்கேட் வங்கி கிளைகளை அணுகினர்.

குமரி மாவட்டத்தில் கருங்கல், முளகுமூடு, நெய்யூர், நாகர்கோவில், குழித்துறை, திருவட்டார், சூரங்குடி, கன்னியாகுமரி, லீபுரம் போன்ற இடங்களில் சின்டிகேட் வங்கி கிளைகள் வாயிலாக கடன் பெற்று தங்கள் அவசர அவசிய தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். சீரான முறையில் செயல்பட்டு வந்த சின்டிகேட் வங்கிகள் 1.4.2020 முதல் மத்திய நிதி அமைச்சர் அறிவித்த வங்கி இணைப்பு திட்டத்தின் கீழ் கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. நகைகடன் வசதிக்கு சின்டிகேட் வங்கியில் 1.5 சதவீதம் சேவை கட்டணம் மற்றும் நகை மதிப்பீடு கட்டணம் ஆகியவை மிக குறைவாக வசூலிக்கப்பட்டு வந்தது. பொதுமக்களுக்கு இது பெரும் சுமையாக இருந்தது இல்லை. மாறாக கனரா வங்கி நிர்வாகம் சேவை கட்டணங்களை சின்டிகேட் வங்கியுடன் ஒப்பிடும் வகையில் மிக அதிகமாக பல மடங்கு வரை உயர்த்தி வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நகை கடன் கம்ப்யூட்டரில் ஓப்பன் செய்வதற்கு தனி கட்டணம், நகை கடன் எடுப்பதற்கு முன்னதாகவே குளோசிங் சார்ஜ், பல மடங்கு பெருமானமுள்ள நகைகளை வைத்து கடன் பெறுவதற்கு முன்பாக ‘சிபில் செக்கிங் சார்ஜ்’ என்று பலவிதமான நேரடி மற்றும் மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மேலும் இதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பெருந்தொகையை உடனடியாக கடன் பெறுவோரிடம் இருந்து பெறாமல் அந்த தொகை முழுவதும் வாடிக்கையாளர் பெறுகின்ற நகை கடன் தொகையுடன் சேர்த்து கடன் தொகை நாளது தேதியில் இருந்து கடன் முடிவது வரையிலும் வட்டி கணக்கிட்டு பெறப்பட்டு வருகிறது. இது விவசாயிகளை மிகவும் வேதனையடைய செய்துள்ளது. எனவே இந்த நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக குமரி மாவட்ட பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ கூறியதாவது: வங்கிகள் இணைப்பு காரணமாக பொதுமக்களிடம் கொள்ளையடிக்கின்ற வகையில் கனரா வங்கி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களை, விவசாயிகளை ஏமாற்றி சேவை கட்டணத்திற்கும் வட்டி வசூலிக்கின்ற வினோதமான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நகை கடன் வசதிக்கு இப்படி என்றால் மற்ற வகை கடன்களில் எவ்வளவு கட்டண கொள்ளை நடைபெறுகிறது? என்பதை வங்கி நிர்வாகம் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

தற்போது கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு தங்களுடைய செலவுகளுக்கு சிரமம் ஏற்பட்டு தங்களின் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வருகின்ற வாடிக்கையாளர்களையும், பொதுமக்களையும், விவசாயிகளையும் அதிகமான சேவை கட்டணங்களை உறுதி செய்து அதற்கும் வட்டி வசூலிக்கின்ற கொடூர நிகழ்வுக்கு கனரா வங்கி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் சின்டிகேட் வங்கிகளை முன்பு போன்று தன்னிச்சையாக செயல்பட விட வேண்டும். இது தொடர்பாக நமது உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து சம்பந்தப்பட்ட மத்திய அரசையும், கனரா வங்கி நிர்வாகத்தையும் சீரமைப்புக்கு வழி வகுக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் பொதுமக்கள் வருமானமிழந்து வாழ வழியில்லாத நிலையில் தாங்கள் பெற்ற கடன்கள் பல மாதங்களாக தவணைக்கு விடுதலை அளித்ததுடன் வங்கிகள் கடன் தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது என்பதில் தீவிரமாக இருந்து வரும் உச்சநீதிமன்றம், சேவை கட்டண கொள்ளையில் ஈடுபட்ட வரும் கனரா வங்கி நிர்வாகம் சேவை கட்டணத்திற்கும் சேர்த்து வட்டி வசூல் செய்வதை மாபெரும் குற்றமாக கருதி நியாயமான முறையில் சேவை கட்டணம் வசூலிக்க வங்கிகள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் மீது திணிக்கப்படும் இந்த வேதனையான வட்டியுடன் சேவை கட்டண வசூல் செய்யும் கனரா வங்கியை நிர்வாக சீரமைப்புக்கு பிந்தைய நிர்வாகத்தை சின்டிகேட் வங்கி நிர்வாகத்தின் கீழ் மாற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர், வங்கி அதிகாரிகளுக்கும் மனுக்கள் அனுப்பியுள்ளோம்’ என்றார்.

விவசாய நகை கடனுக்கு மானியம் ரத்து

இது தொடர்பாக விவசாயி தக்கலை பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவர் கூறுகையில், ‘சின்டிகேட் வங்கியாக செயல்பட்டபோது நகை கடன் ஒரு லட்சத்திற்கு மட்டும் சேவை கட்டணமாக ரூ.20 ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.170 மட்டும் வசூலித்து வந்தனர். கனரா பாங்க் ஆக மாறிய பிறகு செயல்பாட்டு கட்டணம் ரூ.450, லோன் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய ரூ.100, குளோஸ் செய்ய ரூ.200, சிபில் செக்கிங் சார்ஜ் ரூ.60 என்று வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த கட்டணம் அனைத்தும் தங்க நகை லோன் அக்கவுண்டில் சேர்க்கப்பட்டு வருகிறது.

இதனால் சேவை கட்டணத்திற்கும் சேர்த்து வட்டி கொடுக்க வேண்டும். அடகு வைக்கின்ற நகையின் மதிப்பில் பாதிக்கு பாதிதான் நகை கடன் வழங்கப்படுகிறது. இதில் சிபில் ஸ்கோர் பார்க்க  வேண்டியண்டிய தேவை எங்கிருந்து வருகிறது. அந்த வகையில் 1 லட்சத்திற்கு ரூ.900 முதல் ரூ.1000 வரை வாடிக்கையாளரிடம் இருந்து நகை கடனுக்காக கொடுக்கப்படுகிறது. முன்பு கடந்த அக்டோபர் மாதம் முன்பு வரை விவசாய நகை கடனுக்கு வட்டி மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது வட்டி மானியம் வழங்கப்படுவது இல்லை. முன்பு ஏழு சதவீத வட்டி கொடுத்தாலும் ஒரு வருடம் முன்பு திரும்ப செலுத்துவோருக்கு 3 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதனால் 4 சதவீத வட்டி மட்டுமே கணக்கிடப்படும். இப்போது அது இல்லை. 7 சதவீத வட்டியில் இருந்தது 7.85 சதவீத வட்டியாக உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. கனரா வங்கி மட்டுமின்றி தேசிய மயமாக்கப்பட்ட பல வங்கிகளிலும் இதுதான் தற்போதைய நிலைமையாக உள்ளது. இந்தநிலை மாற வேண்டும்’ என்றார்.

Tags : banks , Interest, GST, Collection
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்