1200 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலில் சுரங்க பாதை கண்டுபிடிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 1200 ஆண்டு பழமை வாய்ந்த கோயில் வளாகத்தில் சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் பகுதியில் துறைகாட்டும் வள்ளலார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு 1959ம் ஆண்டு 25வது தருமை ஆதீனத்தால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதன்பிறகு 57 ஆண்டுகளுக்கு பின் 2016ல் 26வது ஆதீனம் சண்முகதேசிக சுவாமிகள் குடமுழுக்கு பணியை துவக்கி வைத்தவர். 2019 டிசம்பரில் அவர் மறைந்தார். அதன்பின் 27வது சந்நிதானம் மாசிலாமணி சுவாமிகள் குடமுழுக்கு பணியை தீவிரப்படுத்தி அடுத்த மாதம் 4ம்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இதற்கான பணிகள் தூரிதமாக நடக்கிறது. கோயிலின் வடபுறத்தில் மழைநீர் சேமிப்புத்தொட்டி இரண்டு கட்டப்பட்டது. அதில் மேல்புறத்தில் ஒன்றை கட்டுவதற்காக 10 அடி ஆழத்தில் குழி தோண்டியபோது கோயிலின் உள்பிராக சுவற்றை ஒட்டியவாறு மிகப்பழமை வாய்ந்த மெல்லிய செங்கல்களால் 4 அடிக்கு 4அடி கொண்ட சுவர் ஒன்று இருந்தது. அந்த சுவற்றை உடைத்து பார்த்தபோது சுரங்கம் ஒன்று இருந்தது தெரியவந்தது. அதன் உள்ளே 10அடி தூரம்வரை சென்று பார்த்தபோது அங்கே ஒரு சுவர் உள்ளது தெரியவந்தது. முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரியவில்லை என்று அதை அடைத்து விட்டு மழைநீர் வடிகாலுக்கான உரை இறக்கப்பட்டு முற்றிலும் மூடப்பட்டு விட்டது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற தொல்லியல்துறை ஆய்வாளர் முத்துச்சாமி கூறும்போது, தஞ்சையை ஆண்ட சோழர்களின் இளம் வாரிசுகளுக்கு போர் பயிற்சி உட்பட அனைத்து பயிற்சிகளும் மிகவும் ரகசியமாக பயிற்சி களங்கள் கோயில் வளாகத்தில் தான் அமைக்கப்பட்டு வந்துள்ளது. அனைத்து பயிற்சிகளும் முடிந்தபிறகு அவர்களுக்கு முடிசூட்டி அவர்களை அரண்மனைக்கு அழைத்து செல்வார்கள். மயிலாடுதுறைக்கு வடக்கே வரகடை என்ற இடத்தில் இரண்டு ஆறுகள் இணையும் இடத்தில் உள்ள கோயிலில் இதன் வரலாறு தெரிய வந்துள்ளது, அதே போன்று செம்பனார்கோவில் பகுதியில் உள்ள முடிதிருச்சம்பள்ளி மற்றும் முடிகொண்டான், மணல்மேடு பகுதியில் உள்ள முடிகொண்டான் போன்ற ஊர்களின் பெயர் இளவரசர்களின் வரலாறு கூறுகிறது.

அதே போன்றுதான் இந்த ஆலயத்திற்கு அடிக்கடி அரச வாரிசுகள் வருவதும் தங்குவதும் வாடிக்கையாக இருந்திருக்கலாம். ஆலயத்தில் இருக்கும் காலத்தில் ஆபத்து என்றால் இதுபோன்ற சுரங்கப்பாதையின் வழியே தப்பித்து செல்வதற்கான முன்ஏற்பாடுதான் இந்த சுரங்கப்பாதையாகும். சுரங்கப்பாதை என்பது பல மைல் கொண்டது இல்லை. அதிகபட்சமாக 1 பர்லாங்கு தூரம் மட்டுமே இருக்கும். இந்த ஆலயத்தில் எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை என்றார்.

Related Stories:

>