×

இந்துக்களுக்கு முதல் எதிரியே பாஜகதான் : மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்களை வழங்கக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் பேட்டி

புதுச்சேரி, :இந்துக்களுக்கு முதல் எதிரியே பாஜக தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்களை வழங்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் திருமாவளவன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும். இதுதொடர்பாக மத்திய அரசு 3 மாத காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என கூறியது. ஆனால், மத்திய பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என கூறிவிட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ இடங்களை மத்திய அரசு பறித்துள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது.

பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்துக்களுக்கு ஒரே எதிரியும் அவர்கள் தான். அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சட்ட மசோதா நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என பாஜக கணினி பிரிவு நிர்வாகி கூறியுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. மதுரை எம்ய்ஸ் நிர்வாக குழுவில் சுப்பையா என்பவரை நியமித்துள்ளனர். அவர் மீது பெண்களை அவமதித்த வழக்கு உள்ளது. எனவே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். சிதம்பரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போராட்டத்தை சில நாட்கள் தள்ளி வைத்துள்ளோம். தமிழக அதிமுக அரசு கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா? அல்லது பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : BJP ,protest ,Thirumavalavan , Hindus, BJP, Demonstration, Thirumavalavan, Interview
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!