×

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் ஒத்துழைப்புடன் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மருத்துவ மேற்படிப்பு இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் தனியார் மருத்துவக்கல்லூரிகளே மாணவர் சேர்க்கையை நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இது சட்டவிரோதம் என மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக் கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளதால், அந்தக் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

மேலும், மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது எனக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தும்படி, தமிழக அரசுக்கும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த  செப். 18ம் தேதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கால நீட்டிப்பு கோரிய தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற உத்தரவை நீக்கினார். அப்போது, மனுதாரர்கள் தரப்பில் நீட் தேர்வில் தங்களைவிட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோதமாக நடைபெற்றுள்ள மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கையை வருகின்ற ஜனவரி 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடத்துமாறு தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பணம் கொடுத்து மருத்துவ படிப்பு இடங்களை விலைக்கு வாங்கும் மாணவர்களால் சமுதாயத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Chennai High Court , Medical Higher Education, Abuse, CPCIT, High Court
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...