×

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது..?

நன்றி குங்குமம்

அண்ணா பல்கலைக்கழகம் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. நுழைவாயிலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அமைப்பினர் கறுப்பு பட்டைகளை சட்டையில் குத்திக்கொண்டும் பதாகைகளைத் தூக்கிக் கொண்டும் பல்கலைக்கழகத்தைச் சுற்றி நின்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாநில அரசின் கீழ் இயங்கிவரும் பல்கலைக்கழகம் மத்திய அரசின் கைக்குப் போய்விடுமோ... இதுவரை இருந்த இடஒதுக்கீடு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடுமோ... என்ற கவலை மாணவர்களின் முகங்களில் எழுதப்படாத வாசகங்களாகத் தெரிகின்றன.இன்னொரு பக்கம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆளும் கட்சிப் பிரமுகர்களே சூரப்பாவை வில்லன் நடிகர் வீரப்பாவாக சித்தரிக்கின்றனர். உண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் என்னதான் நடக்கிறது என்று திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம்.‘‘2017ல் இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிலவற்றை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து (இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்) வழங்கும் ஒரு திட்டத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்று. அதாவது அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஆரம்ப காலங்களில் இருந்த 4 கல்லூரிகளை மட்டும் இணைத்து சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான திட்டம் இது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக உடைவதற்கான முனைப்புகள் வெளிவந்தன. இரண்டாகப் பிரியக்கூடாது என்று சில மாதங்களுக்கு முன்புகூட அந்தக் கல்லூரிப் பேராசிரியர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர். இதை ஆய்வு செய்ய மாநில அரசும் ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது.

ஆனால், அந்த ஆய்வு அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்பாகவே சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டார். அது இப்போதைய எதிர்ப்புகளுக்குக் காரணமாகிவிட்டது...’’ என்று ஆரம்பித்த ரவீந்திரன் அந்தக் கடிதம் குறித்து விளக்கினார். ‘‘‘இதுவரை மாநில அரசு கல்வித்துறையில் பின்பற்றிவரும் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்தவித பங்கமும் வராதவரை சிறப்பு அந்தஸ்துக்கு தயார்’ என்ற நிபந்தனைகளோடு முதன்மை செயலாளரோ அல்லது உயர்கல்வித் துறையினரோ கடிதம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அத்துடன் இந்த விஷயம் தொடர்பாக மாநில அரசின் அறிக்கை வருவதற்கு முன்பாகவே துணைவேந்தர், ‘சிறப்பு அந்தஸ்துக்கு, தான் ஒப்புக்கொள்வதாகவும்,  இதற்காக மத்திய அரசு கொடுக்க நினைத்த முழுப்பணத்தையும் தன் பொறுப்பில் இருக்கும் பல்கலைக்கழகத்தின் ஆதாரங்களில் இருந்தே தர தயாராக இருக்கிறேன்’ என்றும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதுதான் இந்தப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படிக்க ஏங்கியிருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவலை. இது மாணவர்களின் கல்விக்கட்டணத்தை உயர்த்தி பல பிரச்னைகளை விளைவிக்கும்...’’ என்றவர் சிறப்புத் திட்டம் குறித்து விவரித்தார். ‘‘சிறப்புத் திட்டம் தொடர்பாக 5 ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூபாயை மத்திய அரசு தரும். ஒருவேளை இத்திட்டத்தின் செலவு அதிகமாக இருந்தால் மீதியை மாநில அரசுதான் தர வேண்டும். ஏற்கனவே வருடத்துக்கு 40 முதல் 50 கோடி ரூபாயைக் கொடுக்கின்ற மாநில அரசு மேலும் 50 கோடியைக் கொடுத்தால் 5 வருடத்துக்கு 500 கோடியாகிவிடும். மத்திய அரசின் 1000 கோடி, மாநில அரசின் 500 கோடியே இந்த சிறப்பு திட்டத்தை சீரிய முறையில் நடத்த போதுமானது.

ஆனால், இடஒதுக்கீட்டைக் காரணம் காட்டி மாநில அரசு இந்தத் திட்டத்துக்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்தது. இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நிதிப்பற்றாக்குறையால்தான் சிறப்புத் திட்டம் தள்ளிப்போகிறது என்று நினைக்கும் சூரப்பா, மாணவர்களின் தலைமேல் பாரத்தை ஏற்றி கடிதம் எழுதியிருப்பதுதான் மாணவர்களைக் கொதிப்படைய வைத்துள்ளது...’’ என்ற ரவீந்திரனிடம், ‘இடஒதுக்கீட்டில் மாநில அரசின் கொள்கைகளையே பின்பற்றலாம் என்று மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்க, அதற்கும் தமிழக அரசு பதில் சொல்லாமல் இருப்பதற்கான காரணம் என்ன..?’ என்றோம். ‘‘இந்த சிறப்பு திட்டத்துக்கான சட்டம் மத்திய அரசின் கெஸட்டில் ஆணையாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த ஆணைக்கான பிற்சேர்க்கைகள் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தும் யுஜிசியின் வலைத்தளத்திலும் உண்டு. ஆனால், ஆணையில் இருக்கும் ஒரு விஷயம் யுஜிசியின் பிற்சேர்க்கையில் இல்லை. அது மாணவர்களின் அட்மிஷன் தொடர்பானது. அட்மிஷன் தொடர்பானது என்றால் பாராளுமன்றத்தின் இடஒதுக்கீடு சட்டம்தான் பொருந்தும் என்று ஆணையில் உள்ளது. அதாவது மத்திய அரசின் நிறுவனங்களில் பின்பற்றப்படும் 49.5% இடஒதுக்கீடுதான் பாராளுமன்றத்தின் இடஒதுக்கீடு சட்டமாகும். ஆனால், தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோர் என்ற எல்லா பிரிவுகளுக்கும் மொத்தம் 27%; பட்டியலினத்தவருக்கு 15.5%; பழங்குடிகளுக்கு 7.5% இடஒதுக்கீடு இருக்கும். இப்படிப் பார்த்தால் தமிழகத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டில் 19%-ஐ குறைக்க நேரிடும்.

ஆகவே, மனிதவள அமைச்சக கடிதம் எல்லாம் இந்த ஆணையில் உள்ள சட்டத்துக்கு முன் செல்லுபடியாகாத ஒரு குப்பையாகிடும்...’’ என்று கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் முடிக்க, அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்காமலேயே சிறப்பு அந்தஸ்தைப் பெற முடியும் என்று போராடி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவரான பேராசிரியர் அருள் ஆறம் தொடர்ந்தார். ‘‘அண்ணா பல்கலைக்கழகத்தின் சக்தியே அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 550 கல்லூரிகளும் அவற்றில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும்தான். இதில் நான்கை மட்டும் பிரித்து அதற்கு ஒரு புதிய பெயரை வைத்துக் கொண்டால் இன்று இருக்கும் பல்கலைக்கழகத்தின் தரம் குறையத்தான் செய்யும்.தனியார் கல்லூரிகள் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றன; முறைகேடுகள் உள்ளன என்பதை ஒரு பக்கம் வைத்துக்கொண்டாலும் கூட, இந்த 550 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் வசூலிக்கும் அடிப்படைக் கட்டணமே சிறப்பு அந்தஸ்து திட்டத்துக்கான நிதிக்கு உதவும். தவிர, தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பல ஆசிரியர்கள் தற்காலிக பணியில்தான் இருப்பார்கள். அரசு கல்லூரிகளில்தான் திறமை படைத்த ஆசிரியர்கள் இருப்பார்கள். பல்கலைக்கழகம் பிரிக்கப்படாமல் இருந்தால்தான் கல்லூரிகளுக்கு இடையில் நடக்கும் அறிவுப் பரிமாற்றம் மாணவர்களிடையே ஒரு திறனை உண்டாக்கும். இதுவே ஒரு சிறப்பு அந்தஸ்துக்கான களத்தை ஏற்படுத்தித் தரும்.

வெறும் 4 கல்லூரிகளை வைத்து ஆய்வு, கண்டுபிடிப்புகள் என்று சொல்வது எல்லாம் உண்மையில் நடக்கக்கூடிய காரியமல்ல. சிறப்பு அந்தஸ்துக்காக மத்திய அரசு நிதி கொடுக்கும் அல்லது மாநில அரசு பணம் கொடுக்கும் என்று பல்கலைக்கழகம் காத்திருந்தால் இப்போது நடக்கும் காரியங்களும் நடக்காமல் போய்விடும். இன்று வரை மாணவர்களிடம் வசூலிக்கும் குறைந்தளவு கட்டணத்தைக் கொண்டே அண்ணா பல்கலைக்கழகம் இயங்குகிறது. ஒரு காலத்தில் ஆசிரியர்களுக்கான சம்பளத்தை மாநில அரசே கொடுத்தது. கல்லூரிகளிடம்தான் பணம் இருக்கிறதே… ஆசிரியர்களின் சம்பளத்தையும் அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாமே என மாநில அரசு சொல்லிய பிறகும் கூட சொற்ப தொகையை வைத்துக் கொண்டு பல்கலைக்கழகம் சிறப்பாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்காமலும் மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை விட்டுக் கொடுக்காமலும் சிறப்பு அந்தஸ்துக்கான திட்டத்தை அமல்படுத்த முடியும். அதுவே சரியான தீர்வாகவும் இருக்கும் என்பது இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பல ஆசிரியர்களின் கோரிக்கை...’’ என்று முடித்தார் பேராசிரியர் அருள் ஆறம்.  

தொகுப்பு: டி.ரஞ்சித்

Tags : Anna University , Anna University, what's going on
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!