மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு: 5ம் கட்ட ஊரடங்கு தளர்வு நவம்பர் 30 வரை நீட்டிப்பு: புதிதாக எந்த தளர்வும் கிடையாது

புதுடெல்லி: கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அடுத்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இம்மாதம் புதிதாக எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி தேசிய ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. சுமார் 2 மாத ஊரடங்குக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதியில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி 5ம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. அதில், அக்டோபர் 15ம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதே போல, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும், பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பது குறித்து அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, பல மாநிலங்களில் கடந்த 15ம் தேதியிலிருந்து தியேட்டர்கள், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதியின்கீழ், சர்வதேச விமான பயணங்களும் தொடங்கப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளுக்கான கட்டுப்பாடுகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளது. 5ம் கட்ட ஊரடங்கு தளர்வு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், 6ம் கட்ட ஊரடங்கு தளர்வில் மேலும் சில தளர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில், 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. 5ம் கட்ட ஊரடங்கு தளர்வில் என்னென்ன தளர்வுகள் வழங்கப்பட்டதோ அவை அப்படியே தொடரும் என கூறியுள்ளது. குறிப்பாக, மெட்ரோ ரயில் சேவை, கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி, தியேட்டர்கள் செயல்பட அனுமதி, பள்ளிகள் திறப்பு, உணவகங்கள் செயல்பட அனுமதி போன்றவற்றில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, நோய் தொற்று அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் மக்கள், வாகனங்கள் சென்றுவர எந்த வித இ-பாஸ் அல்லது அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த தளர்வுகள் குறித்து மாநில அரசு, அந்தந்தப் பகுதிகளின் நிலவரத்தை பொறுத்து முடிவு எடுக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

பண்டிகை காலம் உஷாரா இருங்க...

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருப்பதால், மக்கள் தொற்றுநோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறாமல் இருக்க கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், பொது இடங்களில் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றத் தவறினால், மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுத்திடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>