×

ஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம், கொலை விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: உயர் நீதிமன்றத்திடம் பொறுப்பு ஒப்படைப்பு

புதுடெல்லி: ஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம், கொலை வழக்கு விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராசில் நடந்த தாழ்த்தப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம், கொலை சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநலன் மனுக்களில், ‘ஹத்ராஸ் விவகாரம் பற்றி  உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், இச்சம்பவத்தில் நடந்த உண்மைகள் வெளிப்படையாக தெரியவரும். மேலும், இந்த வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சமீபத்தில் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்ரமணியன் அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கியது. அதில், ‘இந்த சம்பவம் பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால், உச்ச நீதிமன்றம் இதனை கண்காணிக்க தேவையில்லை. இந்த வழக்கு, விசாரணை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இனிமேல் அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த  வழக்குகள் இத்துடன் முடிக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,murder ,teen rape ,trial ,High Court , Supreme Court refuses to monitor Hadras teen rape and murder trial: Responsibility handed over to HC
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...