வார்னர், சாஹா அதிரடி அரை சதம் டெல்லி கேப்பிடல்சுக்கு 220 ரன் இலக்கு

துபாய்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 220 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. சன்ரைசர்ஸ் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. பேர்ஸ்டோ, பிரியம் கார்க், கலீல் ஆகியோருக்கு பதிலாக வில்லியம்சன், விருத்திமான் சாஹா, ஷாபாஸ் நதீம் இடம் பெற்றனர். கேப்டன் வார்னர், சாஹா இணைந்து சன்ரைசர்ஸ் இன்னிங்சை தொடங்கினர்.

இருவரும் அதிரடியாக விளையாடி டெல்லி பந்துவீச்சை பதம் பார்க்க, சன்ரைசர்ஸ் ஸ்கோர் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறியது. இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கினர். அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் வியூகங்களை மாற்றி முயற்சித்தும், எதுவும் பலனளிக்கவில்லை. வார்னர் 25 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் சாஹாவும் அவருக்கு ஈடுகொடுத்து அதிரடியாக விளையாட, சன்ரைசர்ஸ் அணி 8.4 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 100 ரன்னை எட்டியது.

நேற்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடிய வார்னர், 66 ரன் (34 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அஷ்வின் சுழலில் அக்சர் பட்டேல் வசம் பிடிபட்டார். வார்னர் - சாஹா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. அடுத்து வந்த மணிஷ் பாண்டே பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியை தொடர்ந்த சாஹா 27 பந்தில் அரை சதம் அடித்தார். அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தின் முன்பாக டெல்லி பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

கிடைத்த வாய்ப்பை இரு கரங்களாலும் இறுகப் பற்றிக்கொண்ட சாஹா பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, சன்ரைசர்ஸ் ஸ்கோர் இறக்கை கட்டிப் பறந்தது. முன்னதாக, வார்னர் - சாஹா ஜோடி இணைந்து பவர் பிளேயில் நடப்பு சீசனின் டாப் ஸ்கோரை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாஹா 87 ரன் (45 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நார்ட்ஜ் பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வில்லியம்சன் உள்ளே வர, மணிஷ் பாண்டே அதிரடியில் இறங்கி டெல்லி பவுலர்களை மிரள வைத்தார். 17.3 ஓவரில் 200 ரன்னை எட்டிய சன்ரைசர்ஸ் அண, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது. மணிஷ் 44 ரன் (31 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), வில்லியம்சன் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் நார்ட்ஜ், அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

Related Stories:

>