×

சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திராவில் விஜயதசமி வழிபாட்டில் சம்பிரதாய நிகழ்ச்சி சண்டையாக மாறி வருகிறது. இதில், 40 பேரின் மண்டை உடைந்தது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவருகட்டா குன்றின் மீது மல்லேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளன்று சுவாமி திருக்கல்யாணம் மற்றும் ஊர்வலம் நடைபெறும். அப்போது, உற்சவ மூர்த்திகளை தங்கள் ஊருக்கு கொண்டு செல்வதற்காக அப்பகுதியை சேர்ந்த 5 கிராமமக்கள் கையில் கம்புகளை ஏந்தி சம்பிரதாய முறைப்படி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது போல் நடிப்பது வழக்கம். ஆனால், இந்த நிகழ்ச்சி காலப்போக்கில் சொந்த பகையை தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவிலும் வழக்கம்போல் கலந்து கொண்டனர். சொந்த பகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால், 40க்கும் மேற்பட்டோர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதில், காயமடைந்தவர்கள் ஆதோனியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு உற்சவங்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த சம்பிரதாய உற்சவம் மட்டும் வழக்கம்போல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

முற்றுப்புள்ளி வைக்க ஆலோசனை
ஒவ்வொரு  ஆண்டும் இதேபோன்று அதிகாரிகள் மற்றும் போலீசார் எச்சரிக்கையை மீறி கிராம  மக்கள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு காயமடைவது தொடர் கதையாக  மாறியுள்ளது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி அதிகாரிகள்  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Andhra Pradesh , 40 skulls broken in clash between people resolving feud at ceremonial: Tensions in Andhra Pradesh
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி