×

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் ரோகித் இல்லை: காயம் காரணமாக நீக்கம்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து வந்த அதிரடி வீரர் ரோகித் ஷர்மா காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் முடிந்த பின்னர், விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் மாதம் தொடங்கி 2021 ஜனவரி வரை நடைபெற உள்ள இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மூன்று வகை போட்டிகளுக்குமான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் ஷர்மாவுக்கு காலில் தசைநார் கிழிந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஓய்வெடுத்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. காயம் முழுவதும் குணமாகி உடல்தகுதியை நிரூபித்தால் அவர் ஆஸ்திரேலியா செல்வதற்கான வாய்ப்பு உருவாகும் என்று பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ரோகித் விரைந்து குணமாகி வருவதாகவும், ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட ஆட்டங்களில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித்துக்கு பதிலாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம் பிடித்துள்ளது
குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள தவறியுள்ளார். டி20 அணியில் 2வது விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். கேகேஆர் அணியின் ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இளம் வீரர்கள் நடராஜன், நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் போரெல் ஆகியோர் வலைப்பயிற்சிக்கான பவுலர்களாக இடம் பெற்றுள்ளனர். முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால், மாற்று வீரர்களாக இவர்கள் பயன்படுத்திக்கொள்ளப்படுவார்கள். டி 20 அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யஜ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி.

ஒருநாள் அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயாங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, ஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பூம்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர். டெஸ்ட் அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல் (துணை கேப்டன்/ விக்கெட் கீப்பர்), செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பூம்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், முகமது சிராஜ்.

Tags : Rohit ,tour ,squad ,India ,Australia , Rohit missing from India squad for Australia tour: Dismissed due to injury
× RELATED ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்த ரோகித்: பயிற்சி முகாமில் நெகிழ்ச்சி