×

குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஏன் மீட்கவில்லை? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று காரணத்தினால் குவைத் நாட்டில் சிக்கியிருக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தற்போது வரை மீட்கவில்லை என மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உடனடி தீர்வு காண நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா நோய் தொற்று இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பணி நிமித்தமாக சென்ற பலர் வெளிநாடுகளிலேயே சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், வெளிநாடுவாழ் தமிழர்கள் நல சங்கத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில்,‘‘கொரோனா காரணமாக குவைத் நாட்டில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக 2 ஆயிரம் தமிழக தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து எடுத்த நடவடிக்கை என்ன?, மேலும் அவர்களை மீட்கும் விவகாரத்தில் விமானம் உட்பட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 6ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் நட்ராஜ் வாதத்தில்,” இதுகுறித்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு இருக்கும் இந்திய தூதரகத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை தரப்பின் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சவாலான பிரச்சனையாக உள்ளது என நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து உத்தரவில், நாடு முழுவதும் தற்போது போக்குவரத்து உட்பட எந்த பிரச்சனையும் கிடையாது. அனைத்தும் ஓரளவிற்கு முடிவுக்கு வந்துள்ளது.

அப்படி இருக்கையில் ஏன் குவைத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கவில்லை. குறிப்பாக தமிழகத்தின் சென்னையை சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் உணவுக்கு கூட வழியில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அதுகுறித்து தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பி கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உடனடியாக விரைந்து ஒரு தீர்வு காண வேண்டும். மேற்கொண்டு அவகாசம் கேட்பது சரியாக இருக்காது என உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags : Indians ,Kuwait ,government ,Supreme Court , Why not rescue Indians stranded in Kuwait? Supreme Court condemns federal government
× RELATED வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க...