தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிக்க பாஜ துணை போகக்கூடாது: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை

சென்னை: “தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிப்பதற்கு பாஜக அரசு துணை போகக்கூடாது” என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., வெளியிட்ட அறிக்கை: கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மீனவர்களைக் காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொல்வதும், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவதும்-அவர்களின் மீன்பிடி படகுகளை ஈவு இரக்கமின்றி அடித்து உடைத்துச் சேதப்படுத்தி - வலைகளை அறுத்து எறிந்து நாசம் செய்வதும் இலங்கைக் கடற்படையினரின் தொடர்கதையாகி வருகிறது.

இன்று(நேற்று) நடைபெற்ற தாக்குதலில் மீனவர் ஒருவர் படு காயமடைந்துள்ளார் என்றும்-மற்ற மீனவர்கள் உயிர் தப்பித்தால் போதும் என்றும் கருதித் திரும்பி வந்துவிட்டார்கள் என வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கிறது. . தங்களின் தினசரி வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டுப் பரிதவிக்கும் மீனவர்கள் நலனில் பாராமுகமாக மத்திய பாஜக அரசும்-அந்த அரசுக்கு அழுத்தம் தராமல் அதிமுக அரசும் அமைதி காப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே இலங்கை கடற்படையினர் நம் நாட்டு மீனவர்களைத் தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசுக்குத் தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிப்பதற்கு மத்திய பாஜக அரசு எவ்விதத்திலும் துணை போகக்கூடாது.

Related Stories:

>