×

7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு காலம் தாழ்த்தாமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சருக்கு திமுக எம்பிக்கள் கடிதம்

சென்னை: திமுக நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளில் 7.5% முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள், மருத்துவக் கல்வி பெறுவதற்கும், நாட்டின் எதிர்கால மருத்துவர்களாக வருவதற்கான கனவை நனவாவதற்கும், தடையாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் திமுக வலியுறுத்தி வருவதை, உள்துறை அமைச்சராகிய தாங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன்.

மறுபுறம், 2017- 2018 கல்வியாண்டு முதல் நீட் தேர்வு, அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை ஆராய்வதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் உள்ளிட்ட மூத்த வல்லுநர்கள் அடங்கிய கமிட்டியை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. அந்தக் கமிட்டியின் பரிந்துரை  முடிவின் அடிப்படையில், நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான “மருத்துவம், பல்மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளங்கலைப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020”, கடந்த மாதம் 15ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

16.10.2020 அன்று நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், எனது தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டிலேயே இட ஒதுக்கீட்டின் பலனை அடையும் படியாக மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு கடந்த 21ம் தேதி கடிதம் எழுதினார். ஆனால், வியப்பளிக்கும் வகையில், ஆளுநர் எழுதிய 22ம் தேதியிட்ட கடிதத்தில், ஏற்கனவே 40 நாட்கள் அந்த முக்கியமான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத அவர், அதுகுறித்து முடிவெடுக்க மேலும் மூன்றிலிருந்து நான்கு வாரகால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்புக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாக இருப்பதால் திமுக அமைதியாகவும் ஜனநாயக வழியிலும் அக்டோபர் 24ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியது.

அப்போது, தலைவர் மு.க.ஸ்டாலின் மேலும் காலதாமதமின்றி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஆளுநரை வலியுறுத்தினார்.  ஏற்கனவே நீட் தேர்வு உண்டாக்கியிருக்கும் காயத்தோடு, தற்போது மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு சேர்க்கை நடைமுறைகள் தொடங்கி விட்டன. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் இன்னமும் கால தாமதம் செய்வது மருத்துவக் கல்வியைக் கற்க விரும்பும் அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குவதோடு, இந்தக் கல்வியாண்டைப் பொறுத்தவரையில் அந்த மசோதாவின் நோக்கம் பயனற்றதாகி விடும்.

மேற்சொன்ன காரணத்தினாலும், மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படியும், மருத்துவத்துறையை தங்கள் தொழிலாக அமைத்துக் கொள்ளும் அரசுப்பள்ளி மாணவர்களின் கனவினை இந்த ஆண்டிலேயே நிறைவேற்றும்படியாக “மருத்துவம், பல்மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளங்கலைப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020”-க்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழக ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சர் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Governor ,DMK ,Union Home Minister ,MPs , Governor should approve 7.5 per cent reservation bill without delay: DMK MPs letter to Union Home Minister
× RELATED ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து