×

தமிழகத்தில் தடைமீறி போராட்டம் நடத்த முயற்சி: பாஜ-விசிகவினர் இடையே மோதல்

சிதம்பரம்: சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜவினருக்கும் வி.சி.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், அவரை கைது செய்யக்கோரியும் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க.வினர் அறிவித்திருந்தனர். இதற்கு போட்டியாக வி.சி.க. சார்பில் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கும் போராட்டத்தை அறிவித்து இருந்தனர். இதனால், 2 தரப்புக்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். இந்தநிலையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த இடத்தில் நேற்று காலை ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டது. உடனே, போலீசார், ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்தனர்.

அதேநேரத்தில் வி.சி.க.வினர் காந்தி சிலை பகுதிக்கு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே சிதம்பரம் சபாநாயகர் தெரு, காந்தி சிலை, தனியார் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி விரட்டி கைது செய்தனர். இவ்வாறு 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் மாவட்டம் முழுதும் 1000 பேரை கைது செய்தனர். இதேபோல், தர்மபுரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வி.சி.க. மற்றும் பாஜ  தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கட்டுப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : protest ,Tamil Nadu , Attempt to stage a protest in Tamil Nadu: Clash between BJP-Visikavinar
× RELATED குஷ்புவின் உருவ படத்தை எரித்து திமுக...