×

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செல்லும் வழியில் நடிகை குஷ்பு அதிரடி கைது: பாஜவினர் 19 பேர் மீது வழக்குப்பதிவு :விசிகவினர் மீது போலீசார் தடியடி

சென்னை: சிதம்பரத்தில் நடக்க இருந்த பாஜ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்புவை, முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக, பாஜவினர் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குஷ்பு தங்க வைக்கப்பட்டிருந்த விடுதி முன்பு போராட்டம் நடத்திய விசிகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து, பாஜ மாநில செயலாளர் டால்பின் தர், சமீபத்தில் பாஜவில் இணைந்த நடிகை குஷ்பு ஆகியோர் தலைமையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிதம்பரம் நகர காவல்துறை தடைவிதித்ததது.

இதைதொடர்ந்து, சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் நடிகை குஷ்புவை தடுத்து நிறுத்த, நேற்று முன்தினம் இரவு முதலே போலீசார் இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மண்டல டிஐஜி சாமுண்டீஸ்வரி, செங்கைஎஸ்பி கண்ணன், ஆகியோர் கோவளம் வழியாக சென்ற வாகனங்களை சோதனையிட்டனர். இந்நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் முட்டுக்காடு அருகே பாஜ கொடி கட்டிய கார் ஒன்றில் குஷ்பு  மற்றும் பல்வேறு வாகனங்களில் வந்த 19 பேரை கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டா் ராஜாங்கம், கைது செய்து தையூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைத்தார்பாஜ மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் தலைமையில் 25க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், குஷ்புவை விடுதலை செய்யக்கோரி கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

குஷ்பு கைது செய்யப்பட்டதை அறிந்ததும், கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் வெளியே பாஜவினர் சுமார் 20 பேர் திரண்டனர். அப்போது, 100க்கு மேற்பட்ட விசிகவினர் வந்தனர். குஷ்புவை வெளியே விட வேண்டும். ஏழைகளை கைது செய்தால் திருமண மண்டபம். குஷ்புவுக்கு ரிசார்ட்டா என கோஷமிட்டனர்.  இதையடுத்து செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு வந்து, இருதரப்பையும் விரட்டியடித்தனர். இதில், படுகாயமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன் உள்பட 21 பேர், திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை, திமுக எம்எல்ஏ இதயவர்மன், விடுதலை  சிறுதைகள் கட்சி மாநில துணை தலைவர் வன்னியரசு, மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா உள்பட பலர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அதேபோல், கேளம்பாக்கத்தில் தங்க வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், நகர செயலாளர் ஆனந்தன் ஆகியோரை சந்தித்து பேசினர். மாலையில் குஷ்பு உள்ளிட்ட பாஜவினர் விடுதலை செய்யப்பட்டனர்.

பாஜ நிர்வாகி ராகவன் கைது
விசி்க தலைவர் திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து  பாஜ மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் மற்றும் 5 நிர்வாகிகள்  சென்றனர். அப்போது, அவர்களை அச்சிறுப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.


Tags : Khushboo ,BJP , Actress Khushboo arrested on her way to protest: BJP files case against 19: Police beat Vizika
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...