×

கருணை அடிப்படையில் பணி வழங்குவதில் நியாயமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்: ஐகோர்ட் கருத்து

சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்குவதில் நியாயமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் டெலகிராப் மேனாக பணியாற்றி வந்தவர் கஜேந்திரன். இவர், கடந்த 2003ல் பணிக்காலத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது மனைவி கீதாவுக்கு குடும்ப ஓய்வூதியத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் தந்தது.  இந்நிலையில், கருணை அடிப்படையில் தனது மகன் விஜய பிரசன்னாவுக்கு பணி வழங்கக்கோரி கீதா நிர்வாகத்திடம் 2004ல் மனு கொடுத்தார். இதையடுத்து, விஜய பிரசன்னாவுக்கு ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டது. பின்னர் தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி விஜய பிரசன்னா 2013ல் மீண்டும் மனு கொடுத்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அவர் பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளரிடம் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, தனக்கு பணி வழங்கக்கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி ெசய்யப்பட்டது. மீண்டும் தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு பிஎஸ்என்எல். நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:  கருணை அடிப்படையில் பணி கோருவது உரிமை இல்லை என்றாலும் அதையே காரணமாக பணி வழங்கும் நிர்வாகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதேநேரத்தில், கருணை அடிப்படையில் பணி என்பது கோயில்களுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தரும் பிரசாதம் போன்றதல்ல. கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொண்டு செய்வதும் அல்ல.

ஆனால், அவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் வலியை போக்க முடியாவிட்டாலும் வலியை அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரருக்கு தகுதி மதிப்பெண் வழங்குவதில் நியாயமான, சமமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. எனவே, மனுதாரரின் கோரிக்கையை பிஎஸ்என்எல் நிர்வாகம் 3 மாதங்களில் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : iCourt , Based on the work of grace in providing reasonable approach is to observe: High Concept
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு