கிராம ஊராட்சிகளில் 5 தனி குழுக்கள் அமைக்க ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர்களுக்கு இயக்குநர் கடிதம்

சென்னை: கிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட ஐந்து தனி குழுக்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதம் வருமாறு: கிராமப்புற ஊராட்சி அமைப்புகள் திறம்பட செயல்பட ஏதுவாகவும், அதன் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும் கிராம ஊராட்சி அளவில் 5 குழுக்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நியமனக் குழு, வளர்ச்சிக் குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மைக் குழு, பணிகள் குழு, கல்விக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும், நியமனக் குழுவில் கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். வளர்ச்சிக் குழுவில் ஒன்பது பேர் இருப்பர்.

மேலும் தலைவராக ஊராட்சியின் பெண் வார்டு உறுப்பினர்களில் ஒருவர் இருக்க வேண்டும். தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் குடிநீர் வழங்கும் நிலையங்களை மேற்பார்வையிடுதல், தடுப்பூசி முகாம்கள் நடத்துதல், சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய வேலைகளை கண்காணிப்பது இந்தக் குழுவின் பணியாக இருக்கும். எல்லா கிராம ஊராட்சியிலும் வேளாண்மை மற்றும் நீர்வளங்களைப் பெருக்கிடும் வழிவகைகளைக் கண்டறிய வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மைக் குழு அமைக்கப்படுகிறது. இதில், ஏழு உறுப்பினர்கள் இருப்பார்கள். அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு உதவும் வகையில் இந்த பணி குழு செயல்படும்.

கல்விக் குழு ஊராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், பொது மக்களின் பங்களிப்புடன் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாடு அடையச் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

நியமனக் குழு தவிர்த்து, மற்ற குழுக்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் கிராம ஊராட்சிக் குழுக்களின் பரிந்துரைகளைத் தொகுத்து ஜனவரி முதல் மார்ச் மாதம் காலாண்டில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: