பொதுமக்கள், வணிகர்கள் பயன்பெறும்படி 6ம் கட்ட தளர்வுகளை அறிவிக்க வேண்டும்: வணிகர் சங்கம் கோரிக்கை

சென்னை:  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளிட்டுள்ள அறிக்கை:  கோயம்பேடு பழ மொத்தம் மற்றும் சில்லரை வணிகம், சில்லரை மொத்த காய்கறி வணிகம், மலர் வணிகம் போன்றவற்றில் ஈடுபட்டிருந்த சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான வணிகர்கள் கடந்த 8 மாத காலத்தில் பெரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.  இந்த சூழலில் கொரோனா தொற்று குறைந்து வருவதன் காரணமாகவும், கோயம்பேடு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், கோயம்பேடு அனைத்து வணிக வளாகமும் முழுமையாக செயல்படும் தேதியை, ஒரே நேரத்தில் அறிவிக்க வேண்டும்.

6ம் கட்ட தளர்வுகளை முதல்வர் ஆய்வு செய்து, அறிவிக்க இருக்கும் இந்நிலையில், பண்டிகை கால சலுகைகளாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை எதிர்நோக்கி இருக்கும் காலகட்டத்தில், குறிப்பாக பட்டாசுக் கடைகள், ஜவுளிக்கடைகள், இனிப்பகங்கள் இயங்கும் கால நேரத்தை இரவு 12 வரை நீட்டித்து, பொதுமக்கள் கூட்டம் சேருவதை தவிர்த்து, கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர வணிகர்கள் ஒத்துழைப்பு தரும் நிலையை உருவாக்கி தர வேண்டும். மேலும், சுற்றுலா தலமான குற்றால அருவியையும் அதனை நம்பியுள்ள சுற்றுப்புற வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, குற்றாலம் அருவியை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories:

>