×

சோழவந்தான் அருகே சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: அச்சத்தில் பொதுமக்கள்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முற்றிலும் சிதிலமடைந்த ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ளது முதலைக்குளம். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்த வீட்டுப்பட்டியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 50 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இத்தொட்டி சிதிலமடைந்ததால் இதில் நீர் ஏற்றுவதை நிறுத்தி வேறு தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் பயன்பாடற்ற இத்தொட்டியின் தூண்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் சிதிலமாகி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. முக்கிய இடத்தில் உள்ள இந்த தொட்டி வழியாக பொதுமக்களும், குழந்தைகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதை அகற்றக்கோரி செல்லம்பட்டி யூனியன் அலுவலர்களுக்கு பலமுறை புகார் அளித்தும் கண்டு கொள்ளாததால் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் அரவிந்த் கூறுகையில், ‘ஆபத்தான நிலையில் பயன்பாடு இல்லாத இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றக் கோரி பலமுறை செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆபத்தை அறியாமல் குழந்தைகள் இதன் கீழே விளையாடுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த தொட்டி அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : reservoir ,Cholavanthan: Public , Ruined overhead reservoir near Cholavanthan: Public in fear
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு