×

பொய்கை மாட்டுச்சந்தை களைகட்டியது; ஏராளமான மாடுகள் விற்பனை: சமூக இடைவெளியின்றி குவிந்த வியாபாரிகள்

வேலூர்: பொய்கை மாட்டுச்சந்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று களைகட்டியது. இதில் ஏராளமான மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. சமூக இடைவெளியின்றி வியாபாரிகள் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பொய்கையில் வாரந்தோறும்  செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த  மாட்டுச்சந்தை மிகவும் பிரபலமானதாகும். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பொய்கை  மாட்டுச்சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற  வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

உள்ளூரை சேர்ந்த விவசாயிகள் மாடு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மேலும் கோழி வியாபாரிகளும், காய்கறி வியாபாரிகளும் பெருமளவில்  வருவார்கள். இவற்றை வாங்க பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்களும்  பெருமளவில் திரள்வார்கள். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் பொய்கை மாட்டுச்சந்தை இயங்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1ம்தேதி முதல் வாரச்சந்தைகள் இயங்க அரசு அனுமதித்தது. இதையடுத்து, சுமார் 6 மாதங்களுக்கு பிறகு பொய்கை மாட்டு சந்தை கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஆனால் கடந்த வாரம் வரை அதிகளவு மாடுகள் விற்பனை ஆகவில்லை. இந்நிலையில் இன்று காலை பொய்கை மாட்டு சந்தை கூடியது. அதிகாலை முதலே வியாபாரிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் திரண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவௌியின்றியும் திரண்டிருந்தனர். அதே நேரத்தில் ஏராளமான மாடுகள் இன்று ஒரேநாளில் விற்பனையானது. இதுகுறித்து சமூக அர்வலர்கள் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கு முடிந்து வாரச்சந்தை அனுமதி கிடைத்துள்ளது. தற்போது, வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

ஆனால் பொய்கை மாட்டு சந்தையில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் இல்லை. பலர் முகக்கவசம் இன்றியும், சமூக இடைவெளி இன்றியும் வருபவர்களால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Lots ,Merchants , The false cattle market was weeded out; Lots of cows for sale: Merchants concentrated without social gaps
× RELATED தேர்தல் திருவிழா திருப்பூருக்கு...