×

கோணம் கோவிட் கவனிப்பு மையத்தில் இருந்த மெத்தை, பெட்ஷீட்கள் வெளியே வீச்சு: நோய் பரவும் அபாயம்

நாகர்கோவில்: உலகத்தையே ஆட்டிபடைத்துக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தினமும் சராசரியாக 1000 பேரை காவு வாங்கிய இந்த கொரோனா தொற்று குமரி மாவட்டத்திலும் வேகமாக பரவியது. முதலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ல் இருந்தது. பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று வேகம் அதிகரித்தது. இதனால் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையம், தக்கலை அரசு மருத்துவமனை, கோட்டார் ஆயுர்வேத மருத்துவகல்லூரி, நாகர்கோவில் நகர பகுதியில் 7 கோவிட் கவனிப்பு மையம் தொடங்கப்பட்டது.

கொரோனா தொற்றில் தீவிர பாதிப்பு அடைந்த நோயாளிகளுக்கு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கொரோனா கவனிப்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த வகையில் ஆசாரிபள்ளம் பகுதியில் தனியார் பள்ளி, கோணம் பொறியியல் கல்லூரி, கோணம் கலைக்கல்லூரி, எஸ்எல்பி அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 7 மையங்களிலும் கொரோனா நோயாளிகள் தங்கும் வகையில் படுக்கை, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

கொரோனா தொற்று உச்சத்தை தொட்டப்போது சில கோவிட் கவனிப்பு மையங்களிலும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குமரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா  தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 14 ஆயிரத்து 700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் 13 ஆயிரத்து 926 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனை, கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமைகளில் 341 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் சகச நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி தற்போது தினமும் 50க்கும் உட்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உச்சத்தை அடைந்தபோது கோணம் அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வந்த கோவிட் கவனிப்பு மையத்தில் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். தற்போது அங்கிருந்து அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். தற்போது ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கோணம் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கோவிட் கவனிப்பு மையத்திலும் நோயாளிகள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
 
கோணம் அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வந்த கவனிப்பு மையத்தில் நோயாளிகள் பயன்படுத்திய போர்வைகள், தலையணை, மெத்தை ஆகியவை கோணம் அரசு கல்லூரி வளாகத்திலேயே வீசப்பட்டு உள்ளது. இதனால் நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. நோயாளிகள் பயன்படுத்திய போர்வை, மெத்தை உள்ளிட்ட பொருட்களை அங்கிருந்து அகற்றவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Angle Cowd Care Center Mattress, Bedsheets Out: Risk of spreading disease
× RELATED நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய நபர் கைது