×

பெங்களூரு சிறையில் கொள்ளையன் முருகன் சாவு

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையிலடைக்கப்பட்ட முக்கிய குற்றவாளியான முருகன் உடல்நலக்குறைவால் நேற்றிரவு இறந்தார். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரி உள்ளது. இங்கு கடந்த 2019 அக்டோபர் 2ம் தேதி பின்பக்க சுவரை துளையிட்டு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்தனர். இந்த கொள்ளை தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், கனகவள்ளி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

முக்கிய குற்றவாளியான கனகவள்ளியின் மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், கொள்ளை கும்பல் தலைவன்  முருகன் பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். பெங்களூரு போலீசார் முருகனை பெரம்பலூருக்கு அழைத்து வந்து  ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். திருச்சி போலீசாரும் முருகனை கஸ்டடி எடுத்து விசாரித்தனர். அப்போது கொள்ளையடித்த நகைகளை திருவெறும்பூர் அருகே காவிரி கரையில் பங்கிட்டு கொண்டதும், கொள்ளைக்கு முன் திருவெறும்பூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததையும் கூறினான்.

அதேபோல் திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 700 பவுன், ரூ.19 லட்சம் ரொக்கம் கொள்ளையடித்த வழக்கிலும் முருகன் கும்பலுக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட முருகனுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. பெங்களூரு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன், நேற்று இரவு இறந்தான். முருகன் மீது சென்னையில் 12 வழக்குகள் உள்ளன. இவன் மீது தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் 100க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன.

நடிகைக்கு நகைகள் பரிசு
முருகன் தனது அக்கா மகன் சுரேஷை ஹீரோவாக அறிமுகம் செய்து தெலுங்கில் 2 சினிமா தயாரித்தான். இதனால் தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலருடன் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் தமிழிலும், தெலுங்கிலும் தற்போது முன்னணி நடிகையாக உள்ள ஒருவருடன் முருகனுக்கு ெநருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அந்த நடிகைக்கு முருகன் விலை உயர்ந்த நகைகளை பரிசளித்துள்ளான்.

போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம்
சென்னை அண்ணா நகரில் கடந்த 2017ல் நடந்த திருட்டு வழக்கில் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருந்தது. இந்த வழக்கில் போலீசார் முருகனை தேடினர். அப்போது முருகன் அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.19 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், இதனால்  இன்ஸ்பெக்டர் முருகனை கண்டுகொள்ளாமல் விட்டதாகவும் அப்போது கூறப்பட்டது. அதேபோல் திருவாரூர் எஸ்ஐ ஒருவருக்கு முருகன் காரும் பரிசளித்துள்ளான்.

Tags : Murugan ,death ,jail ,Bangalore , Murugan jailed for death in Bangalore jail
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...