×

'தைரியம் இருந்தால் நேரடியாக வாருங்கள்; விவாதிக்க தயார்!' - குஷ்பு

கேளம்பாக்கம்: தைரியம் இருந்தால் நேரடியாக வாருங்கள்; விவாதிக்க தயார் என குஷ்பு தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இந்து பெண்களை இழிவாக பேசியதாக கூறி, அவரை கண்டித்து, அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தலைமையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் நடிகை குஷ்புவை தடுத்து நிறுத்த நேற்று இரவு முதலே போலீசார் இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மண்டல டிஐஜி சாமுண்டீஸ்வரி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், மாமல்லபுரம் ஏடிஎஸ்பி சுந்தரவதனம் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கோவளம் அருகே அவ்வழியே வந்த வாகனங்களை மடக்கி சோதனையிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் முட்டுக்காடு அருகே பாஜக கொடி கட்டிய கார் ஒன்றில் குஷ்பு உள்பட நாலுபேர் வந்தனர். அவர்களை மடக்கிய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதாக குஷ்புவிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கேளம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில் மாலையில் குஷ்பு விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் கேளம்பாக்கத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; தேர்தல் சமயத்தில் மட்டுமே சிலர் கோவில்களுக்கு செல்கின்றனர். பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம். கடலூர் வரை போக வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைத்தோம். தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது.

இது கட்சி ரீதியிலான போராட்டம் அல்ல. ஒரு பெண் என்ற ரீதியில் போராட வந்துள்ளேன். கொள்கைகளை வீட்டில் இருந்து துவங்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் கலவரம் உண்டாக்கப்படும் என்பதாலேயே காவல்துறை காலையில் எங்களை கைது செய்தது. பெண்களை மதிக்குமிடத்தில் கடவுள் இருப்பார், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு, வீட்டிலுள்ள ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மனு கூறுகிறது. மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி உயர்வாக பேசியுள்ள பகுதிகள் திருமாவளவனுக்கு தெரியவில்லை. 3700 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட மனு நூலில் இருந்து 2 வரிகள் சொல்லிவிட்டு திருமாவளவன் என்ன செய்யப்போகிறார்? மனுதர்ம நூலில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றது - அதை ஏன் சொல்லவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.


Tags : Khushbu , 'Come straight if you dare; ready to discuss!' - Khushbu
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...