×

தொடர் விடுமுறை முன்னிட்டு ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஊட்டி: ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக கடந்த மூன்று நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், கண்காட்சிகள், விழாக்கள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. ஊட்டியில் முதல் சீசனில் நடைபெறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி உட்பட அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் சீசன் கடந்த மாதம் துவங்கியது.

எனினும், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், ஊரடங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், வெளியூர்களில் இருந்து ஊட்டிக்கு இ-பாஸ் மூலம் சுற்றுலா பயணிகள் வருவதற்கு இம்மாதம் துவக்கம் முதல் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வருவதற்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் இ-பாஸ் மூலம் அனுமதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், ஆயுதபூஜை மற்றும் வார விடுமுறை தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்த நிலையில், வழக்கத்தை காட்டிலும் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகமாக காணப்பட்டது. கடந்த இரு நாட்களாக தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஓரளவு சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. கடந்த சனிக்கிழமை 500க்கும் மேற்பட்டவர்களும், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

கடந்த வாரங்களில் வார விடுமுறை நாட்களில் 200க்கும் குறைவான சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், இந்த வாரம் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது. இ-பாஸ் முறையை ரத்து செய்தால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : tourist arrivals ,holiday season ,Ooty , Ayudha Pooja, Ooty
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்