×

சத்தியமங்கலம் அருகே வாகனத்தில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை: சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் அம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியை யானை துரத்தி தாக்க முயன்றதால், பரபரப்பு நிலவியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்வதால், திம்பம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழகம்- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து சேவை இல்லாத நிலையில், இரு மாநில எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் கரும்பு தின்று பழகிய ஒற்றை யானை அப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், நேற்று காலை பண்ணாரி சோதனைசாவடி அருகே சாலையோரம் ஒற்றை யானை தீவனம் தின்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், அவ்வழியாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், பண்ணாரியில் இருந்து தாளவாடி செல்ல வாலிபர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். சாலையோரம் நின்றிருந்த ஒற்றை யானை திடீரென இரு சக்கர வாகன ஓட்டியை தாக்க ஓடிவந்தது. அவர்கள் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கி உயிர் தப்பினர். இந்த நிகழ்வை இரு சக்கர வாகனத்தில் சென்ற மற்றொருவர் பயமின்றி யானை தாக்க வருவதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சாலையோரம் முகாமிட்ட ஒற்றை யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து துரத்தினர். இருப்பினும் சாலையோரம் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : motorists ,Satyamangalam , Satyamangalam, the elephant
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே...