×

வேட்டைவலம் தான் வேட்டவலம்... வள்ளலார் தங்கிச்சென்ற ஜமீன் அரண்மனை

சங்க இலக்கியங்களில் மூவேந்தர்களுக்கு இணையாக போற்றப்படும் கடையெழு வள்ளல்களில் திருக்கோவலூர் மலையமான் நெடுமுடிக்காரியும் ஒருவன். மலையமான் என்பது இவனது வம்சத்தை குறிக்கும், மலையமான் மன்னர்கள் ஆண்ட திருக்கோவலூர் பகுதி மிலாடு (மலையமான் நாடு என்பதன் திரிபு) நாட்டின் தலைநகரமாக வேட்டைவலம் இருந்தது. பொது ஆண்டு 1151ல் எழுதப்பட்ட இரண்டாம் ராஜராஜனின் கல்வெட்டில் ‘மிலாடான வேட்டைவலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் ஜமீன்தார்களின் ஆட்சியில் சிங்கவரம், சிங்க நகர் என்றெல்லாம் மாறி தற்போது வேட்டவலம் என அழைக்கப்படுகிறது. இப்போதும் இங்குள்ள ஜமீன் பரம்பரை தமிழக ஜமீன் பரம்பரைகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த அரண்மனையில் இருந்துதான் சமீபத்தில் மரகத லிங்கம் களவு போய் சில நாட்களுக்கு பின்பு அங்குள்ள குப்பை மேட்டிலேயே கண்டெடுக்கப்பட்டது.

இந்த ஜமீன் அரண்மனையில் வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் வந்து ஜமீன்தாரர்களின் இன்னலை தீர்த்ததாக இப்போதும் பெருமைபட பேசுகின்றனர் வேட்டவலம் மக்கள். இப்போதும் வடலூர் ராமலிங்க சுவாமிகள் வந்து அமர்ந்து சென்ற நாற்காலி அங்கு போற்றி பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய வரலாற்று பின்னணியுடன் கூடிய வேட்டவலம் திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையில் விழுப்புரம் மாவட்டத்தின் நுழைவு வாயிலாக அமைந்துள்ள ஒரு பேரூராட்சியாக விளங்கி வருகிறது.
ஏறத்தாழ 8.00 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பேரூராட்சியில் 15 வார்டுகளில் 45 தெருக்கள் அமைந்துள்ளன. இப்பேரூராட்சி 7,681 ஆண்கள் மற்றும் 7,825 பெண்கள் என மொத்த மக்கள் தொகை 15,506 பேர். இப்பேரூராட்சியில் 3,439 குடும்பங்கள் வசித்து வருகிறது. கற்றவர் சதவீதம் 82 சதவீதமாகும். முக்கிய தொழில் விவசாயம், கால்நடை வளர்ப்பு. இப்பேரூராட்சி மிகவும் பசுமையாகவும், பாறைகள் சூழ்ந்தும் இயற்கை மிகு சூழலில் அமையப்பெற்றுள்ளது. இங்கு அகத்தீஸ்வரர் மற்றும் மனோன்மணி அம்மன் என இரண்டு கோயில்கள் அமைந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டுக்கு அடுத்து தாலுகா அந்தஸ்தை பெறும் முழு தகுதியுடன் இருந்தும் என்ன காரணத்தாலோ கீழ்பென்னாத்தூரை கொண்டு புதிய தாலுகாவை உருவாக்கிவிட்டனர். கேட்டால், அது சென்னை நெடுஞ்சாலையில் உள்ளதாக கூறுகின்றனர். எங்களை பொறுத்தவரை தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய நுழைவுவாயிலாக எங்கள் வேட்டவலமே அமைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ₹1 கோடி வரை வர்த்தகம் நடக்கும் எங்கள் பேரூராட்சியில் அனைத்து தெருக்களும் சிமென்ட் சாலைகளாகவும், தார்ச்சாலைகளாகவும் போடப்பட்டுள்ளன. தென்பெண்ணை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. ஆனாலும், வேட்டவலத்தின் முக்கிய பிரச்னை ஆக்கிரமிப்புகளும், போக்குவரத்து நெரிசலும்தான்.

இதற்காகவே புதிய பைபாஸ் சாலை போடப்பட வேண்டும் என்று கேட்டு வருகிறோம். அதற்கான அறிவிப்பு இப்போதுதான் வெளியாகியுள்ளது. அந்த பைபாஸ் சாலையை விரைந்து போட்டு நகரின் போக்குவரத்து சிக்கலுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். அதேபோல் வேட்டவலம் பஸ் நிலையத்துக்குள் எந்த பஸ்சும் வந்து செல்வதில்லை. எல்லா பஸ்களுமே ரோட்டிலேயே நின்று செல்கின்றன. இதனாலும் நகரில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் வேலைவாய்ப்புக்கான எந்த சூழ்நிலையும் இல்லாததால் எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெங்களூரு என்று பிழைப்புக்காக செல்லும் அவலம் உள்ளது. அதை போக்க வேட்டவலத்தை ஒட்டி தொழிற்பேட்டை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கை. அதேபோல் தனியார் கல்லூரிகள்தான் வேட்டவலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளது. வேட்டவலத்தில் ஒரு அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் போன்றவற்றை கொண்டு வர வேண்டும்.

கீழ்பென்னாத்தூர் தாலுகா அந்தஸ்தை பெற்ற நிலையில் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக நிலை உயர்ந்துள்ளது. இச்சூழ்நிலையில் ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ள வேட்டவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவ உபகரணங்களை அமைப்பதுடன், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். இப்படி எங்கள் வேட்டவலத்தின் தேவைகள் அதிகம்தான். எனவே, அவற்றை நிறைவேற்றி தர தமிழக அரசின் கனிவான பார்வை எங்கள் ஊரின் மீது விழ வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்று கூறுகின்றனர் வேட்டவலம் மக்கள்.

அகத்திய மாமுனிவர் வழிபட்ட அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் அமைந்துள்ள தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சிங்கவரம் என்றழைக்கப்பபட்ட வேட்டவலம் பகுதியை வீரபாண்டிய சோழன் அரசாட்சி செய்து வந்த காலத்தில் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்த போது, ஓரிடத்தில் கலப்பை மீது கணீர் என சத்தம் கேட்டது. அதேசமயம் கணீர் சத்தம் கேட்ட இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி பயந்து, உடனே கிராம மக்களிடம் தகவலை கூறினார். பின்னர் அனைவரும் அரசனிடம் சென்று விவரத்தை கூறினர். உடனே தனது அமைச்சரவை சகாக்களுடன் அரசர் தங்கள் குலகுருவிடம் கூறி ஆலோசனை கேட்டார். குலகுருவும் தனது ஞானதிருஷ்டி மூலமாக விவரத்தை உணர்ந்து, ரத்தம் வழிந்தோடும் இடத்தில் பெருமான் சுயம்பு வடிவில் இருப்பதாகவும், அவரை உடனே வெளிப்படுத்தி அங்கு கோயில் கட்ட வேண்டும் என்றும் பணித்தார்.

அதன்படி அங்கு ஈசனுக்கு அழகிய கோயில் எழுந்தது. இப்போதும் மூலவரின் தலைப்பகுதியில் ஏர்கலப்பை தட்டிய அடையாளம் உண்டு. அகத்திய மாமுனிவர் கயிலாயத்தில் இருந்து தென்பகுதிக்கு செல்லும் வழியில் இந்த ஈசனை கண்டு வணங்கியதாகவும் புராண வரலாறு கூறுகிறது. அதனாலேயே இங்குள்ள இறைவன் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

Tags : Vettaivalam ,Vallalar , Hunting
× RELATED வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன்பு...