×

தொடரும் பாலியல் பலாத்கார கொலைகள்: சீரழிக்கப்படும் சிறுமிகள்!

மதுரை: ‘‘அண்ணா... பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா... வலி தாங்க முடியலைண்ணா...’’ - என்று ஒரு இளம்பெண் கதறும் பொள்ளாச்சி சம்பவ வீடியோவை பார்த்தவர்கள், ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்கள். வலைத்தளங்கள் மூலம் மாணவிகள் உட்பட பல பெண்களுக்கு வலைவீசி, அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்திய கொடூரத்தை மறந்து விட முடியாது. ஆனால், இந்த ‘அண்ணா’ கதறல்கள் தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 80க்கும் மேற்பட்ட பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 2018ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான  தாக்குதல், வரதட்சணை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் 3.78 லட்சமாக இருந்தது. 2019ல் 7.3 சதவீதம் அதிகரித்து 4.05 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஒரு லட்சம் வரை...

கடந்த ஆண்டு பதிவான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 32,033. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 6 ஆயிரம் மற்றும் உ.பி மாநிலத்தில் 3,065 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் கொடுமை என்னவென்றால், இவையெல்லாம் முறையாக புகார் தரப்பட்டு வழக்குகள் பதிவானவை. வெளியில் தெரிந்தால் குடும்ப கவுரவம் போய் விடுமே என்றும், அரசியல் மற்றும் வசதி படைத்தவர்களின் மிரட்டலுக்கு பயந்து புகார் கொடுக்காதவர்களையும் கணக்கிட்டால் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் சம்பவங்கள் வரை இருக்கலாம் என்ற தகவல்கள் மேலும் மிரட்டுகிறது.

அதிகரிக்கும் போக்சோ

தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் போக்சோ வழக்குகள் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் கொடூரமான முறையில், கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நாக்கு அறுக்கப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் / பெண்கள் கொலை செய்யப்படுவதன் மூலம், தமிழகம் மற்றொரு உ.பி மாநிலமாக மாறிக் கொண்டிருப்பதால், மக்கள் மத்தியில் பெண் குழந்தைகள் மீதான அச்சம் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே முடி திருத்தும் தொழிலாளியின், 12 வயது சிறுமி கடந்தாண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், வாயில், மூக்கில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்ட வாலிபர், போதிய ஆதாரங்கள் இல்லையெனக்கூறி விடுதலை செய்யப்பட்டார்.

கூட்டு பலாத்காரம்:

சென்னை அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை லிப்ட் ஆபரேட்டர், காவலாளி உட்பட 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இதில் முதியவர்கள் சிலரும் அடக்கம். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் 7ம் வகுப்பு மாணவி, அதே மாவட்டத்தில் 13 வயது சிறுமி, சிவகங்கையில் 9ம் வகுப்பு மாணவி, கோவை பன்னிமடை பகுதியில் ஒரு சிறுமி, தேனி மாவட்டம், பூதிப்புரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 7 வயது சிறுமி, திருச்சி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமி என தமிழகமெங்கும் ஏராளமான சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது. இவர்களில் பலர் வட இந்திய மாநிலங்களில் நடப்பதை போல, கூட்டு பாலியல் பலாத்கார கொடுமையையும் சந்திக்கின்றனர். அளவில்லா இன்டர்நெட் சேவை மூலம் ஆபாச வீடியோக்களை பார்த்து, இதுபோன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

யாரைத்தான் நம்புவது?

கோவையில் டிவி பார்க்க வந்த 11 வயது சிறுமியை, 3 சிறுவர்கள் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபடுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கித்தந்த மொபைலில்தான் சிறுவர்கள் இதுபோன்ற வீடியோக்களை பார்த்துள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது. பெண்ணின் திருமண வயதே 18 என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சூழலில், விபரமறியாத சிறுமிகள் சீரழிக்கப்படுவதை தடுக்க பாலியல் வன்கொடுமை சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

பாலியல் புகார் வந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். விரைவாக விசாரித்து 6 மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாலியல் வன்கொடுமை சட்டங்களை கடுமையாக்குவதே உத்திரபிரதேசம், வடமதுரை சம்பவங்கள் தொடராமல் இருப்பதற்கு உதவும்.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா. என்றார் மகாகவி பாரதி. பெண் குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்ல... எத்தகைய சூழலில் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்பு கலைகளையும் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான், பெண் குழந்தைகள் இந்த பரந்த உலகில் நிம்மதியாக நடமாட முடியும்.

பெண்களை பாதுகாப்பதில் அரசு அலட்சியம் காட்டுகிறது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறியதாவது: சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள், உ.பி மாநிலத்திற்கு பின் தமிழகத்தில்தான் அதிகம் நடக்கிறது. முன்பு நகர்ப்புறங்களில் நடந்த இதுபோன்ற சம்பவங்கள் கிராமங்களிலும் அதிகரித்து விட்டன. இதற்கு முதலாவதாக ஆபாச வலைத்தளங்கள், 2வதாக டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. மேலும், ஆண் பிள்ளைகளை பெற்றோர்கள் கட்டுப்படுத்துவதில்லை. எந்த நேரத்திலும் வீட்டிற்கு வரலாமென்ற நிலை உள்ளது. இதனால் அவர்கள் தங்கள் போக்குக்கு தவறிழைக்கின்றனர்.

திண்டுக்கல் வடமதுரை சிறுமி சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சிறுமியை வீடு புகுந்து பலாத்காரம் செய்ததோடு, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளனர். இதை ஒருவர் செய்திருக்க முடியாது. இச்சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஒருவர் மீது மட்டும் வழக்கு போடப்பட்டுள்ளது. 2 பேரை விட்டு விட்டனர். நீதிமன்றமும் 35 சாட்சிகளை விசாரித்தும், போதிய ஆதாரமில்லை என்று விடுவித்து விட்டது. மருத்துவ சான்றிதழில் குற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கைதானவரை விடுதலை செய்தால், சிறுமி மீது மின்சாரத்தை பாய்ச்சி கொன்றது யார்?

இதற்கு எல்லாம் காரணம், அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டியது, காவல்துறையின் மெத்தனப்போக்கு இவைகளும் ஒரு காரணம். நடிகர் விஜய் சேதுபதி, கிரிக்கெட் வீரர் டோனியின் பெண் குழந்தைகள் குறித்து பொது வலைத்தளங்களில் தவறாக பதிவிடுகின்றனர். இதுவும் கூட ஒரு வகை பாலியல் அத்துமீறல் தான். இதுபோன்ற சம்பவங்களில்  ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அவர்கள் அரசு, தனியார் அலுவலக பணிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும். கல்விச்சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான், இனி வரும் காலங்களில் அவர்கள் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

40 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் கடத்தல்

தாம்ஸன் ராய்டர்ஸ் ஆய்வு அறிக்கைப்படி, இந்தியாவில் 29 நிமிடத்திற்கு ஒரு பாலியல் பலாத்காரமும், 9 நிமிடத்திற்கொரு குடும்ப  வன்முறையும், 77 நிமிடத்திற்கு ஒரு வரதட்சணை கொடுமையும் நடைபெறுவதாக கூறுகிறது. வருடத்திற்கு 40,000 குழந்தைகள்  கடத்தப்படுவதாகவும், அதில் 11,000 குழந்தைகளை மீட்கவே முடிவதில்லை  எனக்கூறும் மற்றொரு புள்ளிவிபரம் அச்சமூட்டுகிறது.

நல்லவளாக மட்டுமல்ல... வல்லவளாகவும் இருக்கணும்...

குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களில் 95 சதவீதம் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களாலேயே நடைபெறுகிறது. சட்டங்கள் சரியானபடி தனது கடமையைச் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்படுவதோடு இன்னும் கூட கடுமையாக்கப்படலாம். பாலியல் கல்வி முறைப்படுத்தப்பட்டு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக்கலையும், வாழ்வியல் திறன்களும் அளிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இவை அனைத்திற்கும் மேலாக பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, தைரியம் அறச்சீற்றத்தைக் கற்றுத்தரும் நாம் ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கம், நேர்மை மற்றும் பெண் குழந்தைகளை மதித்தல் போன்றவற்றையும் தவறாது கற்றுக் கொடுக்க வேண்டும். பெண் நல்லவளாக இருந்தால் மற்றும் போதாது. தன் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றும் வல்லவளாகவும் இருக்க வேண்டும்.

Tags : rape ,murder ,girls , Rape murders, girls
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...