8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி

ஷார்ஜா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியும் மாற்றமின்றி களமிறங்கியது. கில், ராணா இருவரும் இன்னிங்சை தொடங்கினர். மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே ராணா கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, கேகேஆர் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த ராகுல் திரிபாதி 7 ரன்னும், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும் ஷமி வேகத்தில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, கொல்கத்தா 10 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், கில்  கேப்டன் மோர்கன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். மோர்கன் 40 ரன் (25 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பிஷ்னோய் சுழலில் எம்.அஷ்வின் வசம் பிடிபட, கேகேஆர் ஸ்கோர் வேகம் தடைபட்டது. அடுத்து வந்த சுனில் நரைன், நாகர்கோட்டி தலா 6 ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினர். கம்மின்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய கில் அரை சதம் அடித்தார். அவர் 57 ரன் (45 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஷமி பந்துவீச்சில் பூரன் வசம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் பெர்குசன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். வருண் 2 ரன் எடுத்து ஜார்டன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன் குவித்தது. கில், மோர்கன், பெர்குசன் தவிர்த்து மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பெர்குசன் 24 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), பிரசித் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ஷமி 4 ஓவரில் 35 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஜார்டன், பிஷ்னோய் தலா 2, மேக்ஸ்வெல், எம்.அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கேப்டன் ராகுல், மன்தீப் இருவரும் துரத்தலை தொடங்கினர். இதில் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ராகுல் 28 ரன்கள் (25 பந்து, 4 பவுண்டரி) எடுத்து எல்பிடபிள்யூ கொடுத்து அவுட்டானார்.  ராகுலுக்கு பதிலாக களமிறங்கிய கிறிஸ் கெயில் 51 ரன்கள் (29 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்ஸர்) எடுத்து பெர்குசன் பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணாவிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார். மன்தீப் சிங் 66 ரன்களுடனும் (56 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்ஸர்) பூரன் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தத்தில் 18.5 ஓவர் முடிவில், கிங்ஸ் லெவன் பஞ்சாப், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories:

>