×

முன்னாள் எம்பி.க்கு சொந்தமான 5 மாடி கட்டிடம் இடிந்தது: ராயப்பேட்டையில் பரபரப்பு; மீட்பு பணியில் தீயணைப்பு படை

சென்னை: ராயப்பேட்டையில் முன்னாள் காங்கிரஸ் எம்பி.க்கு சொந்தமான 5 மாடி கட்டிடம் நேற்று இரவு 8 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. சென்னை ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையில் உள்ள புதுக்கல்லூரிக்கு எதிரே பழைய 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் சென்னையை சேர்ந்த ஒருவரின் பழைய பூர்வீக சொத்தாகும். இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் பல கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருந்தன. கடந்த 1977ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை இந்த கடைகளில் வாடகைக்கு இருந்தவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு, ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், கடையை காலி செய்ய மறுத்ததுடன், அனுமதியின்றி 5 மாடி வரை வீடுகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டது. இதில் 13 குடும்பங்கள் வசித்து வந்தன.

இதனிடையே, இந்த வீட்டை கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, காங்கிரஸ் முன்னாள் எம்பி. ஜே.எம். ஆரூணின் மகள் வாங்கியுள்ளார். அவர் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்து, குடியிருந்த குடும்பங்களை காலி செய்ய சொன்னார். அவர்கள் வீட்டை காலி செய்ய நஷ்ட ஈடு கேட்டனர். இதைத் தொடர்ந்து, அவர் கொடுத்த நஷ்ட ஈட்டை பெற்று கொண்டு 12 குடும்பங்கள் காலி செய்து விட்டன. ரெஜினா பேகம் என்ற பெண்மணி மட்டும் வீட்டை காலி செய்யாமல், ரூ.1 கோடி வரை இம்ரானிடம் இருந்து தனது வக்கீல்கள் மூலமாக நஷ்ட ஈடு கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த 5 மாடி கட்டிடம் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அதற்கு ஒரு சில மணி நேரம் முன்பாக தான், ரெஜினா பேகம் அவரது சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனால் உயிர்சேதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. மேலும், வீட்டினுள் 4 1/4 பவுன் தங்க நகைகளும், முக்கிய ஆவணங்களும் இருந்ததாக ரெஜினா தெரிவித்தார். கட்டிடம் இடிந்து விழுந்ததில், கீழே நிறுத்தப்பட்டிருந்த 2 வேன்கள், காங்கிரஸ் முன்னாள் எம்பி. ஜே.எம். ஆரூணின் 2வது மகன் இம்ரானுக்கு சொந்தமான 1 சரக்கு வேன் சேதமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவல்லிக்கேணி, மைலாப்பூர், எஸ்பிளனேடு, தேனாம்பேட்டையை சேர்ந்த 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

* அனுமதி பெறப்பட்டதா?
இடிந்து விழுந்த கட்டிடத்தில் 4 செல்போன் டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் இரண்டு ஒப்பந்தம் முடிந்ததால் அண்மையில் நீக்கப்பட்டன. இரண்டு செல்போன் டவர்கள் மட்டும் தொடர்ந்து இருந்து வந்துள்ளன. செல்போன் டவர்கள் ஒப்பந்த காலத்திற்கு பிறகும் தொடர்ந்து நிறுவப்பட்டிருந்ததா? செல்போன் டவர்கள் நிறுவ முறையான அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

Tags : Fire Brigade , 5-storey building owned by former MP demolished: riots in Rayapettai; Fire Brigade in rescue operation
× RELATED குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன