×

சாத்தான்குளம் இரட்டைக்கொலை விவகாரம் வியாபாரிகளை அரை நிர்வாணமாக்கி ரத்தம் சொட்ட போலீசார் தாக்குதல்

* காவல் நிலைய சுவரில் படிந்த ரத்தக்கறை
* பரிசோதிக்காமல் டாக்டர்கள் மருத்துவ சான்று
* சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

மதுரை: சாத்தான்குளம் வியாபாரிகளை அரை நிர்வாண கோலத்தில் நிற்க வைத்து, ரத்தம் சொட்ட சொட்ட போலீசார் அடித்து துன்புறுத்தியதாக, இரட்டைக் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சிபிஐ தரப்பில் கடந்த செப்.25ம் தேதி மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் இறந்த எஸ்எஸ்ஐ பால்துரையை தவிர்த்து இன்ஸ்பெக்டர் உட்பட 9 பேருக்கும் எதிராக சிபிஐ கூடுதல் எஸ்பி வி.கே.சுக்லா, 31 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். இதில் உள்ள பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

சாத்தான்குளம் காவல் நிலைய சுவரில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனை செய்ததில், ரத்தக்கறையுடன் இருந்த ஆடையுடன் பொருந்தியுள்ளது. இந்த ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடையது என்பது உறுதியாகியுள்ளது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு இரு வழக்குகளிலும் தொடர்பு உள்ளது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணையில், கேமரா, செல்போன் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் 2 பேரும் போலீசாரால் ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கப்பட்டு காயம் ஏற்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது.

அரசு மருத்துவமனையில் உள்ள ஆரம்பக்கட்ட பதிவேடு, மருத்துவ பரிசோதனை அறிக்கை, கிளைச்சிறையில் சேர்க்கை தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்ட இந்த சம்பவம் தொடர்பான பலவித அறிக்கைகளிலும், ஆவணங்களிலும் ஏராளமான முரண்பாடுகள் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜூன் 19ம் தேதி மாலை 7.30 மணிக்கு ஜெயராஜ் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அதன் விவரத்தை கேட்ட பென்னிக்சை காவல் நிலையம் வந்து நேரில் தெரிந்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால் அவரது நண்பரின் பைக்கில் பென்னிக்ஸ் காவல் நிலையம் வந்துள்ளார். அங்கு விபரம் கேட்டபோது, போலீசாருக்கும், பென்னிக்சிற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், பென்னிக்சை பல மணி நேரம் அடித்து தாக்கியுள்ளனர். போலீசாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பென்னிக்சிற்கு தெரியப்படுத்தும்படி போலீசாரிடம், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை விடாமல் தாக்கியுள்ளனர். இருவரையும் அரைநிர்வாண கோலத்தில் மேஜையின் மீது ஏற்றி குனியவைத்து, பின் பகுதியில் தாக்கியுள்ளனர். தனக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருக்கிறது என ஜெயராஜ் கூறியதையும் பொருட்படுத்தாமல் இருந்துள்ளனர். பின்னர் போலீசாரை தாக்கியதாக இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவர்களை அடித்தபோது ஏற்பட்ட ரத்தக் காயங்களை கைலியை கழற்றி துடைக்கச் சொல்லியுள்ளனர். மறுநாள் காலை துப்புரவு பணியாளர் மூலம் காவல் நிலையத்தில் இருந்த ரத்தக்கறை உள்ளிட்ட தடயங்களை அகற்றியுள்ளனர். இதையடுத்து இருவரையும் ரிமாண்ட் செய்வதற்கான தகுதி சான்றிதழ்களை அரசு மருத்துவமனையில் பெற்றுள்ளனர். இருவரையும் பரிசோதிக்காமல் மருத்துவர் தகுதி சான்று வழங்கியுள்ளார். கோவில்பட்டி கிளைச்சிறையில் ரிமாண்ட் செய்தபோது, இருவருக்கும் இருந்த காயங்களை சிறை பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணையில் இருவருக்கும் 18 இடங்களில் காயம் இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா விதிகளை மீறி கடையைத் திறந்திருந்ததாக போலீசார் கூறுவது தவறு. இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sathankulam ,Police attack ,traders , Sathankulam double murder case: Police attack on traders half-naked and bleeding
× RELATED இன்ஸ்டா படுத்தும்பாடு… குளத்தில்...