×

கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம் அதிமுகவில் மாவட்டங்களை பிரிக்கக்கோரி நிர்வாகிகள் போர்க்கொடி

சென்னை: அதிமுகவில் கீழ் மட்ட அளவில் பிரிவினைகள் அதிகரித்து வருவதால், மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது. விஐபிக்களுக்கு வேண்டிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்பதால், காலம் தாழ்த்துவதாகவும், இது தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவ்வப்போது பெரிய அளவில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன. அமைச்சர்களுக்குள் மோதல், எம்எல்ஏக்களுக்குள் மோதல், மாவட்டச் செயலாளருக்கும், அமைச்சருக்கும் மோதல் என்று பல்வேறு மட்டங்களில் மோதல் வெடித்தது. தேர்தல் நெருங்குவதால், முதலில் மாவட்டங்களை பிரித்து, பலருக்கும் பொறுப்புகளை வழங்குவதால், தேர்தலை எளிதாக சந்திக்கலாம் என்று கட்சித் தலைமை கருதியது.

இதற்காக பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. குறிப்பாக சமீபத்தில் வருவாய் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அந்த மாவட்டங்களிலும் கட்சியின் பொறுப்புகள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில் செல்வாக்காக இருந்த பல மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டு மற்றவர்களிடம் வழங்கப்பட்டது. இதனால் பல மாவட்டங்களில் 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை. குறிப்பாக அமைச்சர்கள் செல்வாக்காக உள்ள மாவட்டங்கள் பிரிக்கப்படவே இல்லை. குறிப்பாக சென்னை, விழுப்புரம், நாமக்கல், கோவை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் உள்ளன. இந்த மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை 6 மாவட்டச் செயலாளர்கள் இருந்தாலும், அதை மேலும் பல மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் 4 தொகுதிகள், 5 தொகுதிகள் உள்ளன. இதனால் ஒருவருக்கு 2 தொகுதிகள் வீதம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்களில் ஒருவர்தான் அமைச்சர்கள் பலரையும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தோப்புக்கு அழைத்துச் சென்று முழுமையாக கவனித்து அனுப்புகிறாராம். அதில் பல அமைச்சர்களின் பலான வீடியோக்கள் இப்போது அவரின் கையில் உள்ளதாம்.

இதனால் அமைச்சர்கள் பலர் குறிப்பாக வழிகாட்டு குழுவில் உள்ள அமைச்சர்களே மாவட்ட பிரிப்புக்கு எதிராக உள்ளார்களாம். இதனால் தங்களுடைய சுய ஆசைக்காக கட்சியை சீரழிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் பலர் சூதாட்ட விடுதிகள், மசாஜ் சென்டர்கள், போலியான மது பார்கள் நடத்துகிறார்களாம். ரவுடிகள் துணையுடன் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்களாம். இதனால் சென்னையில் ஒரு தொகுதியில் கூட ஆளும் கட்சி வெற்றி பெற முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளதாக தொண்டர்கள் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

அதேபோல தமிழகத்திலேயே பெரிய மாவட்டமாக விழுப்புரம் இருந்தது. அதில் இருந்து கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது விழுப்புரம்தான் பெரிய மாவட்டமாக உள்ளது. அந்த மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், என்னுடைய மாவட்டத்தைப் பிரித்தால், கட்சியே அங்கு இருக்காது என்று அறிவித்து விட்டார். இதனால் அவரது மாவட்டத்தையும் பிரிக்காமல் உள்ளனர். அதைத் தவிர நாமக்கல், தேனி, சேலம், கோவை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை பிரிக்காமல் உள்ளனர். இந்த மாவட்டங்களிலும் அவர்கள் செல்வாக்கானவர்கள் பொறுப்பாளர்களாக உள்ளதால் அதை பிரிக்க முடியாமல் தலைமைக்கழக நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.

ஆனால் மாவட்டத்தையே பிரிக்க முடியாமல் திணறும் இவர்கள், எப்படி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வியூகத்தை சமாளிக்கப் போகிறார்கள் என்று தொண்டர்கள் புலம்பி வருகின்றனர். மாவட்டங்களை பிரிக்காவிட்டால், தேர்தலில் அதுவே பெரிய வினையாக வந்து விடியும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். அதேநேரத்தில் முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஏற்பட்டதால்தான் மாவட்டங்களை பிரிக்க முடியவில்லை. ஓரிரு நாளில் மாவட்டங்கள் பிரிப்பு தொடர்பாக வழிகாட்டு குழு கூடி முடிவுகளை எடுக்கும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிர்வாகிகள் பிரிக்கப்பட்ட பிறகு தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் பல பொறுப்புகள் உள்ளன. அதையும் பிரித்து மற்றவர்களுக்கு அவர்கள் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம்தான், பொருளாளர் பதவியும் உள்ளது. அதேபோலத்தான், அமைச்சர்கள் பலரிடமும் பல பொறுப்புகளும், மாவட்டச் செயலாளர் பதவியும் உள்ளன. இதனால் அவர்கள் ஏதாவது ஒரு பதவியை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளன.

இது குறித்து நிர்வாகிகள் பலர் கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அதிமுகவில் உள் கட்சி விவகாரத்தை தீர்த்து வைக்காவிட்டால் பெரிய அளவில் மோதல் வெடிக்கும் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம்தான், பொருளாளர் பதவியும் உள்ளது. அதேபோலத்தான், அமைச்சர்கள் பலரிடமும் பல பொறுப்புகளும், மாவட்டச் செயலாளர் பதவியும் உள்ளன. இதனால் அவர்கள் ஏதாவது ஒரு பதவியை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளன.

Tags : conflict ,party ,executives ,districts ,division ,AIADMK , The culmination of factional conflict within the party is the battle flag of executives demanding the division of districts in the AIADMK
× RELATED நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது