7.5% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: “7.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வரை திமுக போராட்டம் ஓயாது” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆளுநர் மாளிகை முன்பு திமுக, நடத்திய  ஆர்ப்பாட்டம், மாணவர் சமுதாயத்திற்குப் புதிய நம்பிக்கையை வழங்கியிருக்கிறது. ஆட்சியில் திமுக இல்லை. அதிகாரமும் நம் கையில் இல்லை. ஆனால், பொதுமக்களின் நலனுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக, என்றென்றும் உத்வேகத்துடன் பாடுபடுகிற இயக்கமாக திமுக இருப்பதால், மக்களின் பெரும் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று நாடாளுமன்றத் தேர்தலிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மிகச் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியினை வழங்கத் தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதன் அடையாளம் தான், திமுக முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்திலும் தன்னெழுச்சியாகத் திரள்கின்ற மக்களின் பேரார்வம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரை வலியுறுத்தியும், மாநில உரிமைகளை அடமானம் வைத்துப் பதவி சுகம் அனுபவித்து, மாணவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வஞ்சகம் இழைக்கும் எடப்பாடி அதிமுக அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் பேரணி நடைபெற்றது.

ஜூன் 15ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் அதைக் கிடப்பில் போடவில்லை. மாறாக, எடப்பாடி அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு தந்தால் போதாது. தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கும் சலுகை வழங்கும் வகையில் திருத்தம் செய்யுங்கள் என்று ஆணையிட்டு, அவசர சட்டத்தைத் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர்.

அதை வெளியேகூடச் சொல்லாமல், ஆளுநரின் உத்தரவைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றி, திருத்தம் செய்து, அவர் கேட்டவாறே எடப்பாடி அரசு அனுப்பி வைத்தது. அதன் பிறகாவது ஒப்புதல் கிடைத்ததா? அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் பன்வாரிலால் இசைவு தரவில்லை. அதன்பிறகு, செப்டம்பர் 15ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் இதற்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு சட்ட மசோதா அனுப்பப்பட்டு 5 வாரங்கள் கடந்துவிட்டன. இன்னும் 4 வார கால அவகாசம் வேண்டும் என ஆளுநர் சொல்கிறார்.

மாநில ஆளுநரின் செயல் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. அதிகார எல்லை மீறலானது. துணிவிருந்தால் ஆளுநரிடம் உரிமைக்குரலை முதல்வர் எழுப்பட்டும். ஆளுநருடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பதை மறைக்காமல் உரைக்கட்டும். உண்மையான அக்கறையும், உறுதியான நிலைப்பாடும் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்தட்டும். அதுவரை, திமுக போராட்டம் ஓயாது. ஊழலில் புரண்டு, பதவி சுகம் அனுபவித்து, ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான விலையாக மத்திய அரசிடம் தனது உரிமைகளைப் பறிகொடுத்திருக்கும் இந்த அடிமைக் கூட்டத்தின் ஆட்டம் அதிக காலம் நீடிக்கப்போவதில்லை. ஆறு மாத காலத்தில் அனைத்தும் மாறும். அப்போது நீட் தேர்வு முற்றிலுமாக நீக்கப்படுவதற்குரிய உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களின் மருத்துவக் கனவு கனிந்து நனவாகும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>