×

அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றியது அதிமுக அரசு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றியது அதிமுக அரசு என்று முதல்வர் பழனிசாமி கூறினார். சென்னை வடபழனியில் உள்ளபோர்டிஸ் மருத்துவமனை நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படும் சிமாங்க் மையங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தாய் சேய் நல பிரிவுகள் ஒப்புயர்வு மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே அதிகளவாக தமிழகத்தில் மட்டுமே சுமார் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவது இத்திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் 16ல் இருந்து 15 ஆகவும், பேறு காலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை பொறுத்தவரையில், 2030ல் அடைய வேண்டிய நீடித்த நிலையான இலக்குகளை இப்போதே அடைந்து விட்டோம்.

சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தை ரூ.120 கோடி மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தும் பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது. ரூ.59 கோடி மதிப்பீட்டில் 4 புற்றுநோய் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேன்மைமிகு மையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்காக, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும், அதிக எண்ணிக்கையில் தமிழகத்துக்கு வருகின்றனர்.

இதன் மூலம், தமிழகம், இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம், வரும் ஆண்டுகளில் கூடுதலாக 1,650 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்கும் வகையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 % வழங்க தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AIADMK ,Edappadi Palanisamy ,government school students ,speech , AIADMK passes 7.5 per cent quota for government school students to study medicine: Chief Minister Edappadi Palanisamy
× RELATED பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா...