×

ஆளுநர் ஒப்புதலை விரைவில் அளிப்பார்: விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழக அரசு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தில் இளங்கலை படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க சட்ட முன்வடிவை சட்டமன்ற பேரவையில் 15.9.2020 அன்று தமிழக முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 4 ஆயிரத்து 43 மருத்துவ இடங்களில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப் புற ஏழை, எளிய மாணவர்கள் ஏறத்தாழ 303 மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநரை சந்தித்து இச்சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்க கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மேற்காணும் சட்ட முன் வடிவுக்கு விரைவில் ஒப்புதல் பெற 5 அமைச்சர்கள் கொண்ட குழு ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. மேலும், இது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இச்சட்ட முன்வடிவுக்கு ஆளுநரின் ஒப்புதலை பெற்ற பின்னரே, இக்கல்வி ஆண்டிற்கான மாணவர் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மாணவர்களின் நலனில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள அக்கறையை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது.  

அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் தமிழ்நாடு முதலமைச்சரின் சிந்தனையில் உதித்த முத்தான திட்டமாகும். இதனை சற்றும் எதிர்பாராத கட்சிகள், இத்திட்டத்தில் தங்களுக்கும் ஆதாயம் தேட முற்படுகிறார்கள். மேலும், நீட் தேர்விற்கான விஷ விதையை விதைத்தபொழுது அதை தடுக்க துரும்பைக் கூட கிள்ளிப் போடாத அரசியல் கட்சிகள், தாங்கள் மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர்களை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.  

தமிழக அரசு ‘நீட் தேர்வை’ நடத்தக் கூடாது என்று கொள்கை அளவிலும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக ஆளுநர் சிறந்த கல்வியாளர். நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர். தமிழக மாணவர்களின் நலனைக் கருதி நாடே எதிர்பார்க்கும் ஒரு நல்ல முடிவினை, ஒப்புதலை விரைவில் அளிப்பார்கள் என நம்புகிறோம். அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற  ஏழை எளிய மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் தமிழ்நாடு  முதலமைச்சரின் சிந்தனையில் உதித்த முத்தான திட்டமாகும். இதனை சற்றும்  எதிர்பாராத கட்சிகள், இத்திட்டத்தில் தங்களுக்கும் ஆதாயம் தேட  முற்படுகிறார்கள். தமிழக மாணவர்களின் நலனைக் கருதி நாடே எதிர்பார்க்கும் ஒரு நல்ல முடிவினை, ஒப்புதலை ஆளுநர் விரைவில் அளிப்பார் என நம்புகிறோம்.

* மக்கள் சக்தி வெடித்தால் 7.5 சதவீதம் சாத்தியமாகும்:  ராமதாஸ், தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளிமாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கடந்த மார்ச் 21ம் தேதி அரசு அறிவித்தது. அடுத்த நாளே சட்டம் இயற்றப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாமா, அது சட்டப்படி செல்லுமா என்பது குறித்தெல்லாம் ஆராய உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரைத்த நிலையில், அதைவிட குறைவாக 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவே அரசு முடிவு செய்துள்ளது. நீதிபதியே பரிந்துரைத்த ஒரு திட்டத்தின் மீது ஆளுநர் சட்ட ஆலோசனை நடத்துவது என்பது, பாலின் நிறம் வெண்மையா என ஆய்வு செய்வதற்கு ஒப்பானது.

ஒருவேளை உண்மையாகவே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டம் குறித்து சட்ட ஆலோசனை பெற வேண்டும் என்று ஆளுநர் விரும்பியிருந்தால் அதை எப்போதோ செய்திருக்கலாம். 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது வேண்டுமானால் செப்டம்பர் 15ம் தேதியாக இருக்கலாம். ஆனால், அதற்கு முன் ஜூன் 15ம் தேதியே இதை அவசர சட்டமாக பிறப்பிக்கும்படி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்தது. ஆனால், அதில் கையெழுத்திடாத ஆளுநர், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் பயனாளிகள் பட்டியலில், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் 25 சதவீத மாணவர்களையும் சேர்க்கும்படி கூறினார். சட்ட ஆலோசனை நடத்தாமல் இப்படி ஒரு திருத்தத்தை ஆளுநரால் வழங்கியிருக்க முடியாது. ஆளுநர் குறிப்பிட்ட திருத்தத்தை செய்து ஜூலை மாத மத்தியில் அவசர சட்டத்தை தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், இரு மாதங்கள் அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு சட்டப்பேரவையைக் கூட்டி செப்டம்பர் 15ம் தேதி சட்டத்தை இயற்றியது.

ஜூன் 15ம் தேதி ஆளுனருக்கு அனுப்பப்பட்ட அவசர சட்டத்திற்கும், செப்டம்பர் 15ம் தேதி அனுப்பப்பட்ட சட்டத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அரசு பள்ளிகளில் பயிலும் 400 ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கும். இது நடக்க வேண்டும் என்று ஆளுநர் நினைத்திருந்தால், ஜூன் மாதம் அவசரச் சட்டம் அனுப்பப்பட்ட போதே சட்ட ஆலோசனை பெற்றோ, பெறாமலோ அதற்கு ஒப்புதல் அளித்திருக்கலாம்.
ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூகநீதி வழங்கப்படுவதில் ஆளுநருக்கு ஏதோ மனத்தடை உள்ளது. அது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணமாகும்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஆளுநரால் நிராகரிக்க முடியாது. அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அதே நேரத்தில் தாமதப்படுத்த முடியும். எனவே தான் சட்ட ஆலோசனை என்ற பெயரில், காலந்தாழ்த்தி நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்காமல் தடுக்க முயற்சி நடக்கிறது. இம்முயற்சி வெற்றி பெற்றால் அது சமூகநீதி மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலாக இருக்கும். மக்களின் சக்தியுடன் ஒப்பிடும்போது அதிகாரவர்க்கங்கள் பலமற்றவை. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மக்கள் புரட்சி வெடித்தால் அது அனைத்துத் தடைகளையும் தகர்க்கும். அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு எந்த தடையும் இல்லாமல் மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சாத்தியமாகும். நீதிபதி பொன்.கலையரசன் தலைமையிலான குழு 10% இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரைத்த நிலையில், அதைவிட குறைவாக 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவே அரசு முடிவு
செய்துள்ளது. நீதிபதியே பரிந்துரைத்த ஒரு திட்டத்தின் மீது ஆளுநர் சட்ட ஆலோசனை நடத்துவது என்பது, பாலின் நிறம் வெண்மையா என ஆய்வு செய்வதற்கு ஒப்பானது.

Tags : Governor ,Health Minister ,Tamil Nadu , Governor will give approval soon: Vijayabaskar, Tamil Nadu Health Minister
× RELATED சுயமரியாதை இருக்குமானால் ஆர்.என்.ரவி...