×

பெண்களை கிண்டல் செய்த ரவுடிகளை கைது செய்ய கோரி நள்ளிரவில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருப்போரூர்: கோவளத்தில், பெண்களை கிண்டல் செய்த ரவுடிகளை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில், திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பலர், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் குவிந்தனர். நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் கடற்கரை அருகே ஒரு கும்பல் மதுபாட்டில்களை கையில் வைத்து கொண்டு, அங்கே கடற்கரைக்கு வந்த இளம்பெண்களை கிண்டல் செய்தனர். இதை பார்த்த உள்ளூர் இளைஞர்கள், அவர்களிடம் கிண்டல் செய்ய வேண்டாம், ஜாலியாக வந்த இடத்தில் பிரச்னை செய்ய வேண்டாம் என அறிவுரை கூறினர். ஆனால் அவர்கள், நாங்கள் யார் தெரியுமா. பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் தம்பிகள் என கூறியுள்ளனர்.

அதற்கு, நீங்கள் யாராக இருந்தால் எங்களுக்கு என்ன, பெண்களை கிண்டல் செய்தால் உதை விழும் என உள்ளூர் இளைஞர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள், மோதல் ஏற்பட்டது. இதில் சிலர், செல்போன் மூலம் வெளியாட்களை வரவழைத்து உள்ளூர் இளைஞர்களை சரமாரியாக தாக்கி விட்டு சென்றனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த 2 பைக், 1 செல்போன் ஆகியவற்றை அங்கேயே விட்டு தப்பினர். இந்த மோதலில் கோவளத்தை சேர்ந்த ராஜ் (25) உள்பட 2 பேர் காயமடைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், கோவளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிய ரவுடிகளை கைது செய்யக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதித்தது. பரபரப்பு நிலவியது. தகவலறிந்து கேளம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, சம்பந்தப்பட்ட ரவுடிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்கண்ட சம்பவம் தொடர்பாக, 2 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். மேலும், கோவளம் கடற்கரைக்கு கும்பலாக வந்த ரவுடிகள் யார் என, அவர்கள் விட்டு சென்ற வாகன பதிவெண் மற்றும் செல்போன் ஆகியவற்றை வைத்து விசாரிக்கின்றனர்.

Tags : rowdies ,arrest ,women , Public roadblock at midnight demanding arrest of rowdies who teased women
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!