பிறந்தநாள் விழாவுக்கு சென்று திரும்பியபோது முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை: 4 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது, முன் விரோத தகராறில் வாலிபர் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை, போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் எலிசா (19). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன். நேற்று முன்தினம் எலிசா, நண்பர் லட்சுமணனின் அண்ணன் குழந்தை பிறந்தநாள் விழாவுக்கு சென்றார். விழா முடிந்து லட்சுமணன், செம்பரம்பாக்கம் பகுதியில் தங்களது உறவினர் வீட்டுக்கு பிறந்தநாள் கேக் மற்றும் பிரியாணி கொடுப்பதற்காக எலிசாவுடன் பைக்கில் சென்றார். இரவு 10 மணியளவில் லட்சுமணனை, அவரது வீட்டில் இறக்கிவிட்டு, எலிசா வீட்டுக்கு புறப்பட்டார்.

சிறுகாவேரிப்பாக்கம் வழியாக எலிசா சென்றபோது, பிடிஓ அலுவலகம் அருகே முட்புதரில் மறைந்திருந்த மர்மநபர்கள், திடீரென எலிசாவை மறித்து, மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் சரமாரியாக தாக்கிவிட்டு அவரது பைக்கை எடுத்துகொண்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த எலிசா சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து பாலுச்செட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், எலிசாவின் தாய்மாமன் சார்லஸ். சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள தாமோதரன் என்பவரது கடையில்  கடனாக பீடி, சிகரெட் வாங்குவது வழக்கம். கடந்த 2018ம் ஆண்டில் சார்லஸ், தாமோதரன் கடையில் கடனாக சிகரெட் கேட்டுள்ளார்.

அப்போது, அங்கிருந்த தாமோதரனின் தந்தை, கடன் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து சென்ற சார்லஸ், தனது நண்பர்கள் கிருஷ்ணா, அன்பு ஆகியோருடன் அங்கு மீண்டும் சென்று கடையில் இருந்த பாட்டில்களை உடைத்து தகராறில் ஈடுபட்டார். மேலும், தாமோதரனின் தந்தை, தாயை சரமாரியாக தாக்கினர். அதில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.

புகாரின்படி பாலுசெட்டிசத்திரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து சார்லஸ் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் எலிசாவுக்கும், தாமோதரனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையொட்டி, எலிசாவை தீர்த்துக்கட்ட தாமோதரன் முடிவு செய்தார். இதுனால் அவரை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எலிசா, பிறந்தநாள் விழாவுக்கு சென்று வருவதை அறிந்த தாமோதரன், தனது நண்பர்கள் அரிகரன், கிருஷ்ணகுமார், கிஷோர்குமார் ஆகியோருடன் சிறுகாவேரிபாக்கம் பகுதியில் மறைந்து இருந்தார். அவர் அப்பகுதியில் வந்தபோது, பைக்கில் இருந்து நிலைதடுமாறி விழ செய்தனர். பின்னர், அவரை பைப், இரும்பு ராடு, கற்களை கொண்டு சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு, பைக்கை எடுத்து சென்றது தெரிந்தது. இதைதொடர்ந்து போலீசார், தலைமறைவாக இருந்த தாமோதரன், அரிகரன் (20), கிருஷ்ணகுமார் (22), கிஷோர்குமார் (22) ஆகியோரை நேற்று மதியம் கைது செய்தனர். பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>