×

செல்போன் டவரில் ஏறி வாலிபர் திடீர் மிரட்டல்

கும்மிடிப்பூண்டி: புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கர்ணா(28). இவர் நேற்று அதிகாலை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள செல்போன் டவரில் 100 மீட்டர் ஏறி திடீரென தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிப்காட் போலீசார் விரைந்து வந்து செல்போன் டவரில் ஏறி அந்த வாலிபரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர் “எனக்கு காதல் பிரச்சினை உள்ளது. அதனை தீர்த்து வைக்க வேண்டும்” என கூறி சுமார் 3 மணி நேரம் டவரில் இருந்தபடியே குரல் எழுப்பினார்.

இதை தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன், துணைத்தலைவர் எல்லப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் தொடர்பு கொண்டு அவரை சமாதானப்படுத்தி 4 மணி நேரம் போராடி கீழே இறக்கினர். பின்னர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவிக்காக கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அந்த வாலிபரிடம் கேட்டதற்கு, “எனது தம்பி வழிப்பறியில் ஈடுபட்டதால் போலீசார் அவனை தேடிவந்தனர். ஆனால் அவன் சரணடையாத நிலையில் அவனுக்கு பதில் 2 நாட்களாக என்னை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனால் நான் மிகுந்த மன வேதனையடைந்து செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றேன்” என கூறினார். இதனால் கும்மிடிப்பூண்டியில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : cell phone tower , Sudden intimidation of a teenager climbing a cell phone tower
× RELATED செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு...