×

தொடர் மழையால் வரத்து குறைகிறது வட மாநிலங்களில் 50% லாரிகளுக்கு சரக்கு இல்லை: தீபாவளியில் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு அபாயம்

சேலம்: வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால், 50% லாரிகளுக்கு சரக்குகள் கிடைக்கவில்லை. இதனால் தீபாவளி பண்டிகையில் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஜவ்வரிசி, ஸ்டார்ச், கைத்தறி ஜவுளி, ஏற்றுமதி ஆடை, அபூர்வா சேலை, அரிசி, முட்டை, நெய், இரும்பு, ஸ்டீல் தகடு கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல், டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, பூண்டு, சீரகம், கொத்தமல்லி, மிளகாய், காஷ்மீர், இமாசல பிரதேசத்தில் இருந்து ஆப்பிள், ஆந்திராவில் சாத்துக்குடி உள்பட பல வகை உணவுப்பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. சில நாட்களாக வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால், வட மாநிலங்களில் 50 சதவீத லாரிகளுக்கு சரக்குகள் கிடைக்கவில்லை என்றும், இதனால் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, சேலம் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு தினசரி 25,000க்கும் மேற்பட்ட லாரிகள் செல்கிறது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், அங்கிருந்து தமிழகத்திற்கு மளிகைப் பொருட்கள் வரத்து குறைந்துள்ளது.  குறிப்பாக பெரிய வெங்காயம், துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு உள்பட பல்வேறு பொருட்கள் வரத்து குறைந்துள்ளதால், தீபாவளி பண்டிகையில் பலாக்காரம் செய்ய பயன்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதேபோல் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் மஞ்சள், ஜவ்வரிசி, இரும்புப்பொருட்கள், பிவிசி பைப்புகள் தேக்கமடைந்துள்ளது. வடமாநிலத்தில் இருந்து கொண்டு வர சரக்குகள் கிடைக்காததால், தமிழகத்தில் 50 சதவீதம் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags : states ,Diwali , 50% of lorries in northern states have no cargo due to continuous rains: Risk of shortage of groceries during Diwali
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து