×

சில்லி பாய்ன்ட்...

* இனவெறி எதிர்ப்பில் ஹர்திக்
கொரோனா பெருந்தொற்று காலத்திலும், இனவெறி காரணமாக ஜார்ஜ் புளாய்டு என்பவர் அமெரிக்க போலீசால் கொல்லப்பட்டார். அதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக ‘#பிளாக் லைவ்ஸ் மேட்டர்’  பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. அப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முட்டிப் போட்டு ஒரு கையை உயர்த்துவார்கள். கொரோனா பீதிக்கு இடையில் முதன்முதலில் நடந்த இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது இப்படி ‘இனவெறிக்கு எதிர்ப்பு’ தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு கண்டு கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் ஐதராபாத் வீரர் ஜேசன் ஹோல்டர்(வெஸ்ட் இண்டீஸ்),‘ஐபிஎல் தொடரில் இனவெறிக்கு எதிராக ஏதும் செய்யப்படவில்லை. அது குறித்து யாரும் பேசவே இல்லை’ என்று வேதனைப்பட்டார். இந்நிலையில் ராஜஸ்தானுக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்தார் ஹர்திக் பாண்டியா. அப்போது மட்டையை உயர்த்தி மகிழ்ச்சி தெரிவிப்பதற்கு பதில் முட்டிப் போட்டு கையை உயர்த்தினார். அதை பார்த்து நெகிழ்ந்துப் போன பொலார்டு கைத்தட்டி பாராட்டினார். அந்தப் போட்டியில் மும்பை வெற்றி பெறாவிட்டாலும் இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

* ஓடி உழைத்த கோஹ்லி
சென்னைக்கு எதிரான போட்டியில் கேப்டன் கோஹ்லி 43 பந்துகளில் 50ரன் எடுத்தார். அதில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என 10ரன்னை 2 பந்துகளில் ஈட்டினார். எஞ்சிய 40ரன்னையும் ஒன்று, இரண்டு என்று ஓடியே சேகரித்தார். ஐபிஎல் வரலாற்றில் இப்படி 40ரன்னை ஓடி, ஓடி சேர்த்த வீரர் என்ற சாதனையை கோஹ்லி படைத்துள்ளார். கூடவே ஐபிஎல் தொடரில் அதிக அரைசதம் விளாசிய டெல்லி வீரர் தவானின் சாதனையை சமன் செய்தார் கோஹ்லி. இருவரும் தலா 39 அரைசதம் விளாசியுள்ளனர். ஐதராபாத் வீரர்  வார்னர் 46அரை சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

* காத்திருந்து... காத்திருந்து...
‘இனி இல்லை’ என்றான பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளைஞர்களை ஓரங்கட்டி வைத்திருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்றன. அப்படி சென்னை அணியில் 2018ம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் மோனு குமார். கடந்த 2 ஆண்டுகளாக வாய்ப்பே கிடைக்காமல், வலைப்பயிற்சியில் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தார். கூடவே டோனியின் குழந்தையை தூக்கிச் செல்வது, கவனிப்பது என்ற வேலைகளையும் செய்து வந்துள்ளார். பெங்களூருக்கு எதிரான போட்டியில் எதிர்பாராமல் வாய்ப்பு கிடைத்தது. திடீர் வாய்ப்பால் பதட்டத்துடனே விளையாடியது வெளிப்படையாக தெரிந்தது. அந்த பதட்டம் காரணமாக, ஆட்டத்தில் அவரால் ‘தீப்பொறி’யை ஏற்படுத்த முடியவில்லை.

* வீடு திரும்பினார் கபில்
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்  கபில்தேவ் மாரடைப்பு காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கபில்தேவ் வீடு திரும்பினார்.

* இளம் வயதில் 50
சென்னை வெற்றிக்கு காரணமான கெய்க்வாட், ஐபிஎல் தொடர்களில் இளம் வயதில் முதல் அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் உள்ள ரெய்னா 21ஆண்டுகள் 148நாட்களிலும், சாம் கரன் 22ஆண்டுகள் 142நாட்களிலும், பார்த்தீவ் படேல் 23 ஆண்டுகள் 76நாட்களிலும் தங்களின் முதல் ஐபிஎல் அரை சதத்தை விளாசியுள்ளனர். கெய்க்வாட் 23ஆண்டுகள் 268நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

* தொடர் வெற்றிக்கு தடை
மும்பை கேப்டன் ரோகித் சர்மா தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடவில்லை. அவருக்கு பதில் பொல்லார்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார். சென்னையை வென்றதின் மூலம் அவர், ஐபிஎல் உள்ளிட்ட டி20 தொடர்களில் கேப்டனாக தொடர்ந்து 18 வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனை படைத்தார். ஆனால் ராஜஸ்தானின் வீரர்கள் அதிரடியால் மும்பை வீழ்ந்தது. அதனால் பொல்லார்டின் தொடர் வெற்றி சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கூடவே ஸ்டோக்ஸ்-சஞ்சு சாம்சன் ஜோடியின் அதிரடியால் புதிய சாதனையும் நிகழ்த்தப்பட்டது. அது மும்பைக்கு எதிராக அதிகபட்ச ரன்னை விரட்டி வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் ராஜஸ்தான் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த 3இடங்களில் முறையே டெல்லி(195ரன், 2018ம் ஆண்டு), ராஜஸ்தான்(188ரன்,2019ம் ஆண்டு, பூனே(185ரன், 2017ம்ஆண்டு) ஆகிய அணிகள் உள்ளன.

Tags : Silly Point ...
× RELATED அக்சர் 66, பன்ட் 88*, ஸ்டப்ஸ் 26* கேப்பிடல்ஸ் 224 ரன் குவிப்பு